அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் இப்படி ஒரு வழக்கு தொடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ’125 ஏ’ பிரிவின் கீழ் தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்திருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாகும். தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலில் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியைத் தழுவினார்.
அந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த பிரமாணப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை அளித்திருக்கிறார் கே.சி.வீரமணி என்று ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்திருந்தார். இந்த புகாரினை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்து வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இதன்படி தேர்தல் ஆணையம் நடத்திய ஆய்வில், வீரமணியின் பிரமாணப்பத்திரத்தில் சொத்துக்களை மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரமாணப்பத்திரத்தில் பல பரிவத்தனைகளை வீரமணி மறைத்திருந்ததும், வருமான வரிக்கணக்கில் முரண்பாடுகள் இருப்பதையும் கண்டறிந்த தேர்தல் ஆணையம் வீரமணி மீது வழக்கு பதிவு செய்தது.
இதன்பின்னர், கவனக்குறைவினால் தவறு நேர்ந்துவிட்டது என்று வீரமணி விளக்கம் அளித்தார். ஆனால், அவரின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.
பிரமாணப்பத்திரத்தில் பொய்யான தகவலைச் சொல்லி தேர்தலில் போட்டியிட்டதாக திருப்பத்தூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண்-1ல் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளார் தேர்தல் அலுவலர். வரும் 26ம் தேதி அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கின் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கே.சி.வீரமணிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்கின்றனர் சட்டநிபுணர்கள்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் வழக்கு தொடந்துள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை என்பதால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.