’’அரசியலில் ஒரு தேர்தலில் சீட்டு கொடுக்கவில்லை என்றாலோ அல்லது கட்சியை விட்டு நீக்கினாலோ அடுத்த 90 நாட்களுக்குள் மாற்று கட்சியில் இணைந்து விடுவார்கள். ஆனால் கட்சியை விட்டு நீக்கி 9 வருடங்கள் ஆகியும் பல மாற்று காட்சிகளில் பெரிய பதவிகள் கொடுப்பதாக அழைத்தும் நான் எந்த காட்சியிலும் இது நாள் வரை இணையாமல், அதிமுக தான் என் கட்சி, நிச்சயம் எம்.ஜி.ஆர். என்னை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்’’ என்று உருக்கமுடன் சொல்கிறார் கே.சி. பழனிசாமி.
என்ன நடந்தது?
கடந்த 2018ல் பன்னீர்செல்வமும் பழனிசாமியும் இணைந்து அதிமுகவை நடத்தி வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்போம் என்று அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த கே.சி.பழனிசாமி சொன்னதால் பாஜக கூட்டணியில் அது வெடித்ததால் கேசிபி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பிற்காக பன்னீர்செல்வம், தினகரனைப் போலவே கேசி பழனிசாமியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
விலக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பிடிவாதமாக இருந்ததால், ’’நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்’ என்ற வார்த்தை ஒரு தலைவரிடத்திலிருந்து வரக்கூடாது.’’ என்றும் பேசிப்பார்த்தார் கேசிபி. இதனால் அதிமுகவில் உள்ள சீனியர்கள் சிலரின் மூலமாக எடப்பாடியிடம் பேசியிருக்கிறார் கேசிபி. ஆனாலும் கேசிபியை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று உறுதியாக சொல்லி இருக்கிறார் எடப்பாடி.
செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் மாற்றுக்கட்சிக்கு சென்றுவிட்ட போதிலும் கூட இன்னமும் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என்றே ஒற்றைக்காலில் தவமிருக்கிறார் கேசிபி.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
