
2023 ஆம் ஆண்டில் அனுப்பிய 982 பக்கங்கள் கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பி இருக்கிறது மத்திய அரசு. அந்த அறிக்கையில் சில திருத்தங்களை செய்து அளிக்குமாறு திருப்பி அனுப்பி இருக்கிறது. இதனால் எனும் கேள்வி எழுந்திருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலும் மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய ஆய்வுப்பணிகளை மேற்கொண்டிருந்தார். அகழாய்வில் 5765க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த இரும்பு, தங்கம், செம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.
அப்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஸ்ரீராம் அந்த ஆய்வினை மேற்கொண்டார். அவர் மூன்றாம் கட்ட ஆய்வினை மேற்கொண்டார். தற்போது 10 ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் முடிந்து 11ஆம் கட்டப் பணிகள் நடைபெற உள்ளன.

கடந்த 2023இல் கீழடியில் தான் மேற்கொண்ட அகழாய்வுகள் குறித்து 982 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார். மத்திய தொல்லியல் துறை அந்த அறிக்கையினை உறுதி செய்து வெளியிட வேண்டும். அந்த அறிக்கையினை வெளியிடாமலே இருந்தது மத்திய தொல்லியல் துறை.
எப்போது வெளியிடப்படும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது.
பலரும் அந்த அறிக்கையினை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது அதில் திருத்தங்கள் செய்து அனுப்புமாறு திருப்பி அனுப்பி விட்டது தொல்லியல் துறை.
மத்திய தொல்லியல் துறையின் இந்த அபத்தமான செயல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
‘’தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக’’ என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி. அவர் மேலும், ‘’ தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது!

அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது. “கீழடி தமிழர்களின் தாய்மடி” என்றஉண்மையை உரக்கச்சொல்வோம்’’ என்று ஆவேசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால், பாஜக பிரமுகர் தமிழிசை சவுந்தரராஜனோ, ’’கீழடி விவகாரத்தில் சு.வெங்கடேசன் அரசியல் செய்யக்கூடாது’’ என்று கீழடியில் பாஜக அரசியல் செய்வதாக சொன்ன குற்றச்சாட்டினை மறுக்கிறார். கீழடி அகழாய்வுக்கு நேரில் வந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன். கீழடி அகழாய்வுக்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான். கீழடி மூலம் தமிழர்களின் பெருமை இன்றைக்கு உலகில் பறைசாற்றப்படுகின்றது என்றால் அதற்கு காரணமே பாஜகதான். அதிகாரியை மாற்றம் செய்ததில் இருந்தே அரசியல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சில தரவுகள் தேவை என்பதற்காக திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். தமிழகத்தின் தொன்மையை நிரூபிக்க இருக்கும் கீழடியை பற்றி பாஜக பேசும்’’ என்கிறார்.
கீழடி ஆய்வறிக்கை திருப்பப்பட்ட விவகாரம் குறித்து பேசி இருக்கும் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன், ‘’கீழடி ஆய்வறிக்கையை மத்திய அரசு விரும்பவில்லை என்பதே உண்மை’’ என்கிறார்.

கீழடியில் பாஜக அரசியல் செய்கிறது என்று பலரும் குற்றம்சாட்டும் நிலையில், தமிழிசை போன்றோர் கீழடியில் அரசியல் செய்யாதீர்கள் என்கிறார்.
’’தமிழர்களின் வரலாற்று பெருமையை உலகம் அறிய மத்திய அரசு விரும்பவில்லை. தமிழர்களின் பெருமையையை அங்கீகரிகக் மறுக்கிறது மத்திய அரசு. மத்திய தொல்லியல் துறையின் செயல் கண்டிக்கத்தக்கது’’ என்கிறார் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்.
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணனோ, ‘’இதை அரசியலாக பார்க்க வேண்டாம். அறிவியல் பூர்வமான ஆதாரத்தை வழங்காமல் பெருமை பேசுவது அர்த்தமல்ல’’ என்கிறார். எழுத்தாளர் வீ.அரசு, ‘’கீழடி ஆய்வில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆய்வறிக்கையை உலகம் அறியக்கூடாது என்று நினைக்கிறது மத்திய அரசு’’ என்கிறார்.