வயநாடு இப்போது உலகின் மிகப் பெரிய மயானமாக மாறியிருக்கும் பேரவலத்தால் கேரளா மாநிலம் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே அதிர்ச்சியலைகள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ச்சியான மழைப் பொழிவு, அதன் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் வயநாடு மலைப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்து போயிருக்கின்றன. கேரள மாநில அரசாங்கத்திற்கு உதவுவதற்குத் தயார் எனத் தமிழ்நாடு அரசு முதல் குரல் கொடுத்தது. நிவாரண நிதி, மருத்துவ உதவிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. அதுபோலவே அண்டை மாநிலங்கள் பலவும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
நாடாளுமன்றத்திலும் இந்த இயற்கைப் பேரழிவு குறித்து பிரதமர் உள்ளிட்டவர்கள் கவலை தெரிவித்ததுடன், மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்படுபவர்கள் ஒரு புறம் என்றால், புதையுண்ட உடல்களை மீட்கும் பெரும் படலமும் தொடர்கிறது. நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.
இந்தப் பேரிடர் குறித்து முன்னெச்சரிக்கை விடுத்தும் கேரள மாநில அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. பேரிடர் முன்னெச்சரிக்கை எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்கிறார் கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன். ஒரே நாளில் மலைப் பகுதியில் 50 செ.மீ.க்கு அதிகமான மழை பெய்யும் என்ற முன்னெச்சரிக்கையை எந்த வானிலை ஆய்வு மையமும் துல்லியமாகத் தெரிவிக்கவில்லை என்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்.
இயற்கைப் பேரிடர்கள் எதையும் யாரும் துல்லியமாகக் கணிக்க முடியாத நிலையில், அரசாங்கங்கள் ஒன்றின் மீது ஒன்று பழி போட்டுக்கொள்வது பாதிப்படைந்த பகுதிக்கு எந்தப் பலனையும் தரப்போவதில்லை.
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரள மாநிலத்தின் அழகே மேற்கு தொடர்ச்சி மலையும் அதிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகளால் விளைந்த பசுமையும்தான். ஊருக்குள்ளேயே நீரோட்டங்களையும் படகு சவாரிகளையும் பார்த்து ரசிக்க முடியும். அதில் வயநாடு மலைப்பகுதி தனி அழகு.
தமிழ்நாட்டிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வயநாடு பகுதிக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக ரிசார்ட்டுகள் உள்ளிட்ட தங்குமிடங்கள், வணிகத்தலங்கள் பெருகியதால் மலைப்பகுதியின் வனச் சூழல் பாதிக்கப்பட்டது. காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையிலான தோட்டங்கள், எஸ்டேட்டுகள் அதிகமாகின. சுற்றுலா என்பது இயற்கை மீதான ரசனை என்பதாக இல்லாமல் அதிக இலாபம் தரும் வணிகமாக மாற்றப்பட்டதன் விளைவு இது என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளத்தையும் அதன் தனித்தன்மையையும் பாதுகாப்பது குறித்து ஏற்கனவே இரண்டு வல்லுநர் குழுவின் அறிக்கைகள் தனித்தனியாக அளிக்கப்பட்டும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் காட்டிய அலட்சியத்தையும் எதிர்ப்பையும் சேர்த்தே சூழலியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை என்பது குஜராத் எல்லையில் தொடங்கி மராட்டியம், கோவா, கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு என விரிகிறது. வயநாட்டை ஒட்டித்தான் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் உள்ளது. வயநாட்டுக்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர் பகுதிகள் மிகப் பெரிய சுற்றுலா வணிகத்தலமாக மாறிவிட்டன. அதுபோல, கொடைக்கானல் மலைப்பகுதியும் வணிக நோக்கில் அணுகப்பட்டு வருகிறது.
1991-96ல் செல்வி.ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் கொடைக்கானலில் விதிகளுக்குப் புறம்பாக ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டலைக் கட்ட அனுமதித்தது தொடர்பாக, 1999ல் வழக்குத் தொடரப்பட்டு, விசாரணையும் நடந்து, அனுமதி அளித்தது தவறு என்ற தீர்ப்பில் ஜெயலலிதாவுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தில் தர்மபுரி இலக்கியம்பட்டியில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் பயணித்த பேருந்து எரிக்கப்பட்டு அப்பாவி மாணவிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஜெயலலிதாவோ சிறைக்கே செல்லாமல் மேல் முறையீட்டில் விடுதலை ஆனார்.
வனத்துறை-மலைவளம் தொடர்பான விதிமுறைகள் எந்தளவுக்கு சட்டம்-நீதியைக் கடந்து அதிகார வர்க்கத்தால் மீறப்படுகின்றன என்பதற்கு கொடைக்கானல் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு ஒரு சோற்றுப் பதம். மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிகள் பல மாறினாலும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில், குறிப்பாக மலைப்பகுதிகளின் தனித்தன்மையைப் பேணுவதில் விதிகளுக்குப் புறம்பான செயல்பாடுகளே அதிகளவில் தொடர்கின்றன. அதன் கோர விளைவுதான் வயநாடு நிலச்சரிவும் உயிரிழப்புகளும். கடவுளின் தேசம் என்பதால் கேரளா கைவிடப்படவில்லை.
கேரளாவைத் தவிர மற்ற மாநிலங்கள் கடவுளற்ற தேசங்களும் அல்ல. இமயம் தொடங்கி குமரி வரை இந்தியா முழுவதுமே இயற்கை வளம் நிறைந்த பகுதிகள்தான்.
வயநாடு சந்தித்த பேரவலத்தை முழுநாடும் சந்திக்காமல் தவிர்க்க வேண்டும் என்றால் சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இயற்கையை சீரழிக்காத வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு மனிதர்களுக்கு வேண்டும்.