அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாட்டைப் போலவே சட்டமன்றத் தேர்தலை சந்திக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்று கேரளா. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சட்டமன்றத் தேர்தல் முடிந்தபிறகு சில மாதங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல்கள் நடப்பது வழக்கம். கேரளாவைப் பொறுத்தவரை, சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் நடந்த கேரள மாநில உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் இந்திய அளவில் சிலருக்கு அதிர்ச்சியையும் சிலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை ஆட்சி செய்து வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு. முன்பு மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் இடதுசாரிகள் ஆட்சி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்றது. இப்போது அங்கு இடதுசாரிகள் பலம் குறைந்த நிலையில் உள்ளனர். அதுபோல திரிபுரா மாநிலத்தில் நீண்டகாலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்றது. இப்போது அங்கு பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி நடைபெறுவது கேரளாவில் மட்டும்தான். வலதுசாரியான பா.ஜ.க.வுக்கு கொள்கைரீதியான அரசியல் எதிரிகள் கம்யூனிஸ்ட்டுகள்தான். அவர்கள் ஆட்சி செய்யும் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கூட்டணி பின்னடைவை சந்தித்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சி அமைப்புகளில் அதிகளவில் வெற்றியைப் பெற்றுள்ளது. கேரளாவைப் பொறுத்தவரை, கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான கூட்டணி ஆட்சியும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியும் மாறி மாறி வருவது வழக்கம். ஆனால், கடந்த தேர்தல்களில் கம்யூனிஸ்ட்டுகளே தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்து வந்தனர். கேரள காங்கிரஸ் கட்சியில் தலைமைப் போட்டி, கோஷ்டி மோதல்கள் வெளிப்பட்ட நிலையில், அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கேரளாவில் பா.ஜ.க. கால் பதிக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, 20 எம்.பி. தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஒரு தொகுதியை பா.ஜ.க. வென்றது. மலையாள நடிகரான சுரேஷ்கோபி பா.ஜ.க.வின் கேரள எம்.பி.யாக நாடாளுமன்றம் சென்றார். காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், கம்யூனிஸ்ட்டுகள் இன்னொரு கூட்டணியாகவும் கேரள நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நின்ற நிலையில், பக்கத்தில் உள்ள தமிழ்நாட்டில் அவர்கள் ஒரே கூட்டணியாக இந்தியா கூட்டணியில் இருந்தனர். கேரளாவில் பா.ஜ.க. தனித்துதான் போட்டியிட்டது. அந்த நிலையிலும், சினிமாப் புகழ் கொண்ட நடிகரை வெற்றிபெறச் செய்தது. இந்த வெற்றிக்கு காரணம் காங்கிரஸின் அலட்சியமா, கம்யூனிஸ்ட்டுகளின் அலட்சியமா என்று இரு தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதுபோலவே பாலக்காடு நகராட்சியிலும் அந்தக் கட்சி அதிக கவுன்சிலர்களைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த நிலையில் இருப்பது இடதுசாரிகள் கூட்டணிதான். ஆனாலும், ஊடகங்களில் ஒரு மாநகராட்சியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது பெரும் செய்தியாகவும், கேரள அரசியலில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது போலவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகிறது. பிரதமர் மோடியே ஒரு மாநகராட்சித் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதைப் பாராட்டி ட்வீட் செய்யும் அளவுக்கு அந்தக் கட்சி இதனை பேசுபொருளாக மாற்ற முயற்சிக்கிறது. காரணம், ஒரு புறம் காங்கிரஸ், மற்றொருபுறம் கம்யூனிஸ்ட்டுகள் அரண் அமைத்திருந்த கேரளாவுக்குள் அதன் தலைநகரிலேயே நாங்கள் நுழைந்துவிட்டோம் என்கிற தொனியில் பா.ஜ.க.வின் குரல் ஒலிக்கிறது. இந்திய அளவில் பா.ஜ.கவுடன் இதுவரை நேரடி கூட்டணி அமைக்காத கட்சிகளின் பட்டியலில் காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் இருக்கிறார்கள். காங்கிரசுக்கு எதிராக வெற்றி பெற்று இடதுசாரிகள் பல காலம் ஆட்சி செய்த மேற்கு வங்கத்தில் இப்போது தேர்தல் கள நிலவரத்தை உணர்ந்து, அரசியல் கணக்குடன் அந்த மாநிலத்தில் காங்சிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதி உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளன. ஏனெனில், அந்த மாநிலத்தில் மார்க்சிஸ்ட்டும் காங்கிரசும் தேர்தல் களத்தில் முறையே மூன்றாவது, நான்காவது இடங்களில் உள்ளன. மம்தாவின் திரிணாமூல் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் அங்கு நேரடி போட்டி. கேரளாவைப் பொறுத்தவரை இன்னமும் காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணிக்கும்தான் போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியைப் பலப்படுத்தும் வகையில் இரு கட்சிகளும் தங்கள் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்து, கட்டமைப்பை மேம்படுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறினால், பா.ஜ.க. தரப்பிலான கொண்டாட்டங்கள் அதிகரிக்கக்கூடும் என்பதே கேரளா சொல்லும் பாடம். இது தமிழ்நாட்டிற்கும் சேர்த்துதான்.
