பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளத்தை மட்டுமல்லாது நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாதத்திற்கு மேலாக இளநிலை மருத்துவர்கள் நீதி கேட்டு வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேற்கு வங்காளத்தை பெரிய அளவில் உலுக்கி எடுத்திருக்கிறது.
மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு நாடே போராடியது. ஆனாலும் மேற்கு வங்காள இளநிலை மருத்துவர்கள் அந்த சம்பவம் நடந்த தினத்தில் இருந்து இன்று வரையிலும் 37வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவது அம்மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அம்மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு ஒரு மாதத்திற்கு மேலாக முடங்கிக்கிடக்கிறது. சிகிச்சை கிடைக்காமல் 20க்கு மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்த அவலம் அரங்கேறியிருக்கிறது.
ஒரு உயிருக்காக போராட்டம் என்கிற பெயரில் 20 உயிர்கள் போக காரணமாகவும் அமைந்துவிட்டதால், அந்த மருத்துவருக்கு நேர்ந்தது கொடுமை என்றால், இளநிலை மருத்துவர்களின் தொடர் போராட்டம் அதைவிடக்கொடுமை என்கிற மக்களின் புலம்பல் ஒலிக்கத்தொடங்கிவிட்டது.
சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பின்னரும் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்குரல்கள் அதிகரித்ததால் ’நீதி கிடைக்க நான் ராஜினாமா செய்யவும் தயார்’ என்று அறிவித்துப்பார்த்தார் மம்தா. அப்படியும் போராட்ட மருத்துவர்கள் சமாதானம் ஆகவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மருத்துவர்கள் பணிக்குத் திரும்பவில்லை என்பது அம்மாநிலத்தை பெரும் கவலைக்குரியதாக்கியது.
பேச்சுவார்த்தையை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை மம்தா ஏற்காததால், அவர் 4 முறை சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போராடும் மருத்துவர்கள் அதை ஏற்கவில்லை. மாநிலத்தின் நிலைமை கருதி ’இறுதி பேச்சுவார்த்தை அழைப்பு’ என்று ஐந்தாவது முறையாக மம்தா விடுத்த அழைப்பை ஏற்று, பேச்சுவார்த்தை நிகழ்வுகளை பதிவு செய்து கையெழுத்து போட்ட பிரதி வழங்கினால் போதும் என்கிற நிபந்தனையுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் 30 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு பங்கேற்றுள்ளது. 2 மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தையில் போராட்டக்குழுவின் 99 சதவிகித கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்று மம்தா அறிவித்துள்ளார்.
போராட்டக்குழுவுக்கு அளித்த வாக்குறுதிப்படி, 2 உயர் மருத்துவ அதிகாரிகளையும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத்குமார் கோயல் ஐ.பி.எஸ்ஸையும் நீக்குவதாக அறிவித்துள்ளார். அவர் இன்றைக்கு ராஜினாமா செய்துவிடுவார் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார் மம்தா. சுகாதாரத்துறையில் 3 பேரை நீக்க வேண்டும் என்று கோரியிருந்த நிலையில், மக்கள் பாதிக்கப்படக்கூடாது; அதற்கு மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக 2 பேரின் நீக்கத்திற்கு ஒப்புக்கொண்டோம். 99% கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டோம் என்கிறார் மம்தா.
கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் மீண்டும் பணிக்குத்திரும்புவது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்று போராட்டக்குழு கூறியிருக்கிறது. மக்களின் நிலையை உணர்ந்து விரைந்து ஆலோசித்து உடனடியாக பணிக்குத்திரும்ப வேண்டும் என்பதே மேற்கு வங்க மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நோயாளிகளை வதைப்பது என்பது எந்த விதத்திலும் சரியாகாது. ஒரு காயத்திற்கு இன்னொரு காயம் என்பது நியாயமல்ல என்பதை உணர்ந்து உடனடியாக போராடும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.