பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவரின் நகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், தோல் ஆகியவரை டி.என்.ஏ.சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில், கைதாகி இருக்கும் சஞ்சய் ராயின் டி.என்.ஏ. உடன் பொருந்தி இருக்கிறது.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நடந்த அந்த கொடூரத்தில் சஞ்சய் ராயை எதிர்த்து போராடியபோது பெண் மருத்துவரின் உடலில் 25 காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சஞ்சய் ராய் குறித்து போலீஸ் விசாரணையில் முழு விபரங்களும் தெரியவந்துள்ளன. தாய், 2 சகோதரிகளுடன் வசித்து வந்திருக்கிறார் சஞ்சய் ராய். மூத்த சகோதரி கொல்கத்தா போலீசில் உதவி சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். போலீஸ் தன்னார்வலராக உள்ளார் தங்கை. சஞ்சய் ராயும் கடந்த 2019ம் ஆண்டில் போலீசில் தன்னார்வலராக சேர்ந்துள்ளார். போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கிப்பழகி வந்ததால் காவல்துறை நல வாரியத்தில் இணைக்கப்பட்டிருக்கிறார். காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு தேவையான மருத்துவத்திற்காக அடிக்கடி மருத்துவமனை வந்து சென்றிருக்கிறார். உயரதிகாரிகளின் செல்வாக்கு இருந்ததால் மருத்துவனையில் அதிக செல்வாக்குடன் வலம் வந்திருக்கிறார்.
அந்த கொல்கத்தா அரசு மருத்துவமனையில் நர்ஸ் மற்றும் மருத்துவர்களின் ஷிப்ட் நேரத்தை மாற்றி அமைக்கும் அளவுக்கு சஞ்சய் ராய் கையில் பவர் வந்துவிட்டது.
தன் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று சஞ்சய் ராயின் கர்ப்பிணி மனைவி கடந்த 2022ல் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் சஞ்சய் ராய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இதற்கிடையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார்.
சஞ்சய் ராயிடம் ஒரு நல்ல குணம் கூட கிடையாது என்கிறார் அவரின் சகோதரி. மேலும், பெண் மருத்துவர் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டாலும் நாங்கள் சஞ்சய் உடலை எடுத்து செல்ல மாட்டோம் உறுதியாக கூறியிருக்கிறார்.