கொல்கத்தா பெண் மருத்துவரின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அதிரவைக்கிறது. 25 இடங்களில் காயம் ஏற்படும் அளவுக்கு பாலியல் வன்கொடுமையில் கடுமையாக போராடி இருக்கிறார் என்கிற உண்மைகள் நாட்டையே உலுக்கி எடுத்திருக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு பணி முடிந்து சக மருத்துவர்களுடன் கருத்தரங்கு அறையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அதிகாலை 1.30 மணி அளவில் சக மருத்துவர்கள் வெளியேறியதும் அவர் அங்கேயே படுத்து தூங்கி இருக்கிறார். அதுதான் அவர்களுக்கு ஓய்வறை. அதிகாலை 3 மணிக்கு பயிற்சி மருத்துவர் ஒருவர் வந்து மருத்துவ அறிக்கையை காட்ட அவரை எழுப்பி இருக்கிறார். அவர்தான் கடையாக உயிருடன் பார்த்திருக்கிறார். அதன் பின்னர் காலை 9 மணிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்த உடலைத்தான் சக மருத்துவர்கள் பார்த்துள்ளனர்.
மாலை 6.10 முதல் 7.10 மணி வரையிலும் பிரேத பரிசோதனை நடந்துள்ளது. இந்த பரிசோதனை முடிவுகளின்படி, அந்த பெண் மருத்துவரை முதற்கட்டமாக தலையணை வைத்து முகத்தில் அழுத்தி, கழுத்தை நெரித்திருக்கிறார்கள். அவர் சத்தம் போடுவதை தடுக்க வாய், தொண்டை அழுத்தப்பட்டிருக்கிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
கழுத்தை நெரித்ததால் தைராய்டு குருத்தெலும்பு உடைபட்டிருக்கிறது. முகக்கண்ணாடி உடைந்ததால் இரண்டு கண்களில் இருந்தும் ரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளது. உடலின் பல்வேறு இடங்களில் கீறல்களும், ரத்தக்கறைகளும் இருந்துள்ளன. அந்தரங்க பகுதியில் இருந்தும் ரத்தம் வழிந்துள்ளது.
கைகள் மற்றும் முழங்கால்களில் கடுமையான சிராய்ப்புகள் இருந்துள்ளன. நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. கன்னங்கள், உதடுகள், மூக்கு என்று 16 இடங்களில் வெளிப்புற காயங்களும், உச்சந்தலை உள்பட 9 புற காயங்களும் இருந்துள்ளன. இதன் மூலம் பாலியல் வன்கொடுமையின்போது கடுமையாக போராடி இருக்கிறார் அந்த பெண் மருத்துவர் என்பது தெரியவருகிறது.