பெண்களுக்குப் பாதுகாப்பான இந்திய நகரங்களில் சென்னை, மதுரை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுடன் கோயம்புத்தூரும் இடம்பெற்றுள்ளது. அந்தக் கோவையில் கடந்த ஞாயிறு (நவம்பர் 2) இரவில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியதும், அவருடன் இருந்த நண்பரை வெட்டி விட்டு, மூன்று பேர் சேர்ந்து இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியிருப்பதும் தமிழ்நாட்டையே அதிரவைத்துள்ளது.
காவல்துறை உடனடியாகப் புலனாய்வு விசாரணையைத் தொடங்கி, குற்றவாளிகள் மூன்று பேரை சுட்டுப் பிடித்திருக்கிறது. கூட்டுப் பாலியல் கொடூரத்தை செய்த குணா என்பவனுக்கு 30 வயது, சதீஷ் என்பவனுக்கு 20 வயது. கார்த்திக் என்பவனுக்கு 21 வயது. இதில் சதீஷூம் கார்த்தியும் சகோதரர்கள் என்பதும், குணா என்பவன் இவர்களின் உறவினர் என்பதும் மேலும் அதிர்ச்சித் தரும் செய்திகளாகும். மூவரும் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையின் விசாரணையிலும் மருத்துவ ஆய்விலும் தெரிய வந்துள்ளது. இவர்கள் மூவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் ஏற்கனவே இருப்பதும், ஜாமீன் பெற்று வெளியில் உலவுவதும் அடுத்த கட்ட அதிர்ச்சி. “இவனுங்களையெல்லாம் விசாரித்து ஜெயிலில் போட்டு நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கக்கூடாது. என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள வேண்டும்” என்பது இந்த அக்கிரமத்தை தாங்க முடியாத பொதுமக்களின் விருப்பமாகவும் கோரிக்கையாகவும் இருக்கிறது.
இந்தியாவின் சட்டங்கள் அதற்கு இடம்தராது. தற்போதுள்ள சட்டங்களே கடுமையான தண்டனைக்குப் போதுமென்றாலும், அதில் உள்ள சந்துபொந்துகளைப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிவிடுவது தொடர்கிறது. அதனால்தான், உடனடி தண்டனைத் தீர்ப்பை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கொடூரம் நடந்த இடம், கோவை விமான நிலையத்தின் பின்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமில்லாத-சரியான பாதையோ இரவு நேர விளக்குகளோ இல்லாத இடம். பகலில் அந்தப் பக்கமாக செல்லும் கோவைவாசிகளே இரவு நேரத்தில் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், சமூக விரோதிகள் அங்கே அதிகளவில் நடமாடுவதுதான். அந்தப் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை மூடப்பட்டுவிட்ட நிலையில், சட்டவிரோதமாக அங்கு மதுவிற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. அதிகாரப்பூர்வமான மதுக்கடைகளுக்குத்தான் நேரக் கட்டுப்பாடு உள்ளது. இப்படிப்பட்ட சட்டவிரோத விற்பனை எல்லா நேரத்திலும் நடக்கும். இது கோவை காவல்துறைக்குத் தெரியாமல் போனது எப்படி? பீளமேட்டிலிருந்து ஒண்டிப்புதூர் வரை செல்லும் மக்கள் பகல் நேரத்தில் இதனைப் பயன்படுத்தும்போது, இரவு நேரத்தில் அவர்களே அதனைத் தவிர்த்து வருவதற்கு காரணம், இருட்டாக இருப்பதும் அது சமூக விரோதிகளுக்கு சாதகமாக இருப்பதும்தான். இதுவும் காவல்துறைக்கும் உள்ளாட்சி நிர்வாகத்துக்கும் தெரியாமல் போனது எப்படி? கோவையைப் போல தமிழ்நாட்டில் பல நகரங்களிலும் இப்படிப்பட்ட சமூக விரோதக் கூடாரங்கள் உள்ளன. ஒவ்வொரு காலத்திலும் இடம் மாறுமே தவிர, சமூக விரோதிகளின் செயல்பாடுகள் மாறாது. காலத்திற்கேற்ப அவை கூடுதலாகும்.
மதுபோதையுடன் கஞ்சா போதையும் இன்றைய தலைமுறையிடம் பரவி வருகிறது. கொரோனாவில் மதுக்கடைகள் மூடப்பட்ட நேரத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகிவிட்டன. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றவாளிகள் துடியலூர் அருகே பதுங்கியிருந்ததை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்த திறமைமிகு காவல்துறையினரால் நிச்சயமாக சமூக விரோதிகளின் கூடாரங்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் தேடிக் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறிய முடியும். கஞ்சா போன்ற போதை பொருட்களை சப்ளை செய்பவர்கள், அவர்களிடம் வாங்குபவர்கள், அதைப் பயன்படுத்துகிற இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோத மது விற்பனை-கள்ளச்சாராயம் ஆகியவற்றையும் தடுக்க முடியும். கோவை பாலியல் கொடூரத்தில் உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்துள்ள காவல்துறையைப் பாராட்டியுள்ள முதலமைச்சர்,ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, ஒரு குற்றவாளியும் தப்பிவிடாதபடி கடுமையான தண்டனைக்கு வழிவகுக்கப்படும் என உறுதியளித்திருக்கிறார். முதலமைச்சராக அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்தே விடியல் பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எனப் பெண்கள் முன்னேற்றத்திற்கானப் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் பெண்கள் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவில் பணியாளர்களாக உள்ள பெண்களில் 42% தமிழ்நாட்டுப் பெண்களின் பங்களிப்பு. பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டுப் பெண்கள் சாதனைகள் படைத்து வரும் நிலையில், கோவை நிகழ்வு இனியும் தொடரக்கூடாது. முதலமைச்சரின் முயற்சிகளுக்கு அவர் பொறுப்பில் உள்ள காவல்துறையின் அலட்சியமே எமனாகிவிடக்கூடாது.
