மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தமிழக பாஜகவும், அதிமுகவும் மாறி மாறி வசைபாடி வருகின்றனர். அண்ணாமலைக்கு வாய் அடக்கம் இல்லாததால்தான் தமிழகத்தில் பாஜக தோற்றது என்று அதிமுகவினரும், பாஜக தோற்றாலும் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி இருக்கிறது. ஆனால் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவோ வாய் அடக்கம் இல்லாததால் தான் பல தொகுதிகளில் டெபாசிட் இழந்து நிற்கிறது என்று பதிலடி கொடுத்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்பு ஊழல் கட்சி அதிமுக என்றும், ஊழல் வழக்கில் சிறை சென்ற முதல்வர் ஜெயலலிதா குறித்தும் பேசி அதிமுகவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தி இருந்தார் அண்ணாமலை.
தற்போது பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து அதிமுக பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் கோவை சத்யன், பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கருவி ஒன்றை தங்கள் தரப்பு கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு காப்புரிமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தாங்கள் கண்டுபிடித்த இந்த கருவியை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ஒன்றிய அரசின் ஒத்துழைபை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் என்று குற்றம்சாட்டியிருக்கும் கோவை சத்யன், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவில்தான் அதிகமாக பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்.
கடந்த 2021ல் நாடு முழுவதும் நடந்த 31,516 பாலியல் வன்கொடுமைகளில் ராஜஸ்தானில் 6,337 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன. உத்தரபிரதேசத்தில் -2,845, மத்தியபிரதேசத்தில் -2,947, மகாராஷ்டிராவில் 2,496 பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன என்பதையும் அவர் ஆதாரத்துடன் கூறியிருக்கிறார்.
பாஜக மீதான இந்த குற்றச்சாட்டினால் அதிமுக – பாஜக மோதல் வலுக்கும் என்பது ஒருபக்கம் இருக்க, பாஜகவின் மீது குற்றச்சாட்டினை அதிமுக துணிந்து வைத்தற்கு வலைத்தளங்களில் ஆதரவு பெருகுகிறது.