’’நாலு பேரு சாப்பிடணும்னா எதுவும் தப்பில்ல’’ங்கிறது நாயகன் படத்தில் கமல்ஹாசன் பேசும் டயலாக். அதற்கு கமல்ஹாசன் மகள், ‘’நாலு பேர் சாப்பிடணுங்கிறதுக்காக ஒருத்தர கொல்லுறது தப்பில்லையா?’’ என்று கேட்பார்.
இந்த இரு டயாக்குகளும் பாலா வாழ்க்கையில் சுழன்றடிக்கிறது.
நாலு பேரு சாப்பிடுவதற்காக அவர் செய்யும் உதவிகள், தேசத்துரோகமாக மாறும் என்கிறார்கள். நாலு பேருக்கு உதவி செய்யுறதே தப்பு என்று எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
என்ன நடந்தது? ஏன் இந்த எதிர்ப்பு?
ஏழைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாலா, விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடித்து இன்றைக்கு சினிமாவில் ஹீரோவாகவும் உயர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், துயரங்களையும் அனுபவித்ததால், பிறர் துன்பப்படுவதை கண்டு மனமிரங்கி தன்னால் இயன்ற உதவிகள் செய்து வருகிறார் பாலா.
அயர்ன் பாக்ஸ், சைக்கிள், பைக், ஆட்டோ உதவிகள் செய்து வந்த பாலா, 4 ஆம்புலன்ஸ்களும் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். இப்போது தனக்காக வீடு கட்ட வாங்கிய இடத்தில் மருத்துவமனையும் கட்டி வருகிறார். நலிந்த கலைஞர்களுக்கு பண உதவியும் செய்து வருகிறார்.

இவை எல்லாம் சோசியல் மீடிக்களில் வைரலாகி வருகின்றனர். இதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை சம்பாதித்து வைத்துள்ளார் பாலா.
இதனால்தான் அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ‘காந்தி கண்ணாடி’ படம் சரியாக இல்லை என்றாலும் கூட அதை பலர் விமர்சனம் செய்யாமல் தவிர்த்தார்கள்.
ஆனால் பாலா தரப்பினரோ, தன் வளர்ச்சியை பிடிக்காமல் தவிர்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

அந்நிய சக்தி ஊடுருவலா?
காந்தி கண்ணாடி விவகாரம் முடிந்த தருவாயில், அதே நேரம் நேபாளத்திலும், லண்டனிலும் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், அந்த மக்கள் புரட்சிக்கு சோசியல் மீடியாக்கள் முக்கியப் பங்காற்றி வந்திருக்கின்றன என்பதையும் முடிச்சுப்போட்டு, அதே மாதிரி பாலாவால் எதிர்காலத்தில் அந்நிய சக்திகள் தமிழ்நாட்டிலும் புரட்சி என்கிற பெயரில் மாநிலத்தை நாசமாக்கும் என்று பத்திரிகையாளர் உமாபதி ஒரு குண்டை தூக்கிப் போட்டார். இது பெரிதாக வெடித்துள்ளது.

நேபாளத்தில் போராடும் GEN -Z தலைமுறைகளின் தலைவராக பார்க்கப்படுகிறார் 36 வயதான சுதர்ன் குருங். லண்டலில் டாமி ராபின்சன் தலைமையில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டம் வெடித்திருக்கிறது. இதே போன்று பாலா, ராகவா லாரன்ஸ் போன்றோரை சமூக ஊடகங்கள் மூலம் வளர்த்து விட்டு பின்னர் அவர்கள் மூலம் தேச விரோத செயல்களை அரங்கேற்றுவார்கள். அதன் பின்னர் இந்தியாவையே கைப்பற்றிவிடும் அந்நிய சக்தி என்கிறது உமாபதி உள்ளிட்டோரின் பார்வைகள்.

நாடகமா?
பாலா சின்னச்சின்ன உதவிகள் செய்து வந்தார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததால் அவரை அந்நிய சக்தி இயக்குகிறது. அவர் அமெரிக்கா சென்று வந்த பின்னர்தான் இந்த சந்தேகம் எழுகிறது.
ஏன் என்றால், டிவி ஷோக்களில் வாங்கும் சம்பளத்தில் அவர் இத்தனை உதவிகள் செய்ய முடியாது. அது மட்டுமல்லாமல், அவர் வாங்கிக்கொடுக்கும் வாகனங்களின் எண்கள் எல்லாமே போலியானவை. இவை திட்டமிட்டே வீடியோ ஷூட் செய்து மக்களிடையே நன் மதிப்பை பெற பரப்பப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் காரணமா?
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் ரிலீஸ் நாளில் காந்தி கண்ணாடி படம் ரிலீஸ் ஆனதால் சிவகார்த்திகேயனுக்கு போட்டியா? என்ற சர்ச்சை எழுந்தது. இதை மறுத்தார் பாலா. அதே நேரம், தனது காந்தி கண்ணாடி படத்தை திரையிட தியேட்டர் தர மறுக்கிறார்கள். காந்தி கண்ணாடி படத்தின் போஸ்டர்களை கிழிக்கிறார்கள் என்று பாலாவும் அவரது தரப்பினரும் குற்றம் சாட்டியதால், இவர் அந்த நேரத்தில் மதராஸி ஓடிக்கொண்டிருந்ததால் சிவகார்த்திகேயனை குற்றம்சாட்டுகிறாரா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் பாலா மீது நடைபெறும் இந்த தாக்குதல்களுக்கு சிவகார்த்திகேயன் தரப்பினர்தான் காரணமா?என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தினக்கூலி:
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார் பாலா. நான் தினக்கூலி. என்னைப் போய் அந்நிய கைக்கூலி என்கிறார்கள். வீடு கட்ட வாங்கிய 600 சதுர அடி இடத்தில்தான் மருத்துவமனை கட்டுகிறேன். டிவி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள், விளம்பரப்படங்களில் நடித்து வரும் பணத்தைதான் உதவி செய்கிறேன். என் பெயரை மக்களிடையே கலங்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, ‘’பிரச்சனை இருக்கிறது என்பதால்தான் நல்லது செய்கிறேன். அந்த நல்லது செய்வதிலேயே இத்தனை பிரச்சனை வருகிறதே’’ என்று வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் பாலா.

மக்கள் அச்சம்:
பிறருக்கு உதவி செய்வது என்பதே பெரிய விசயமாக இருக்கிறது. அப்படி இருக்கும் போது பலருக்கும் உதவி செய்யும் பாலாவின் மனிதாபிமானத்தின் மீது இப்படி கல்லெறிந்தால் வலியால் அவர் தனது மனிதாபிமான வழியை மாற்றிக்கொண்டால் பலருக்கும் உதவிகள் கிடைக்காமல் போய்விடும். எதிர்காலத்தில் பாலா போன்று உதவி செய்து ஏன் தலைவலியை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடும் என்று பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

பாலாவின் உறுதி:
பலரும் இப்படி அச்சம் தெரிவித்தும் வரும் வேளையில் பாலாவோ, ’’நீங்கள் செய்வதெல்லாம் பார்த்து ஓடமாட்டேன். எனக்கென்று மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நான் கடைசி வரை இருப்பேன்’’என்கிறார் உறுதியாக.
