விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் இரு தினங்களுக்கு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது. கன்னியாகுமரியில் நடந்த பேரணியை குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். இதனால் அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிவிப்பில், ‘கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். தளவாய்சுந்தரம், தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தளவாய் சுந்தரம், ‘’ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் பலம் உறையும் என்று இபிஎஸ் நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால், தொகுதி எம்.எல்.ஏ என்கிற முறையில்தான் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்தேன். நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என சொல்ல வேண்டியதுதான். என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலை இல்லை’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா, ‘ தளவாய் சுந்தரம் பாஜக அல்லது ஆர்.எஸ்.ஆஸ்.ஸில் இணைவதை வரவேற்கிறேன்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
அதிமுகவில் இருந்து சென்றவர்கள் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் நிலையில் தளவாய் சுந்தரம் குறித்து எச்.ராஜா சொன்னதை வைத்து பார்க்கும்போது, ஒருவேளை பாஜகவுக்கு தாவும் நோக்கில்தான் ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்தாரா தளவாய் சுந்தரம்? இது தெரிந்துதான் அவரை பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளாரா எடப்பாடி பழனிச்சாமி? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.