குவைத் நாட்டில் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கி உள்ளனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் கட்டிடத்தின் சமையலறையில் திடீரென்று தீப்பிடித்தது. இந்த தீ கட்டிடம் முழுவதும் பரவியது. கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்துவிட்ட நிலையில் , பலர் தூங்கியதால் கட்டிடத்தின் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னரே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் 41 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட தமிழர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு உதவுமாறு அயலக தமிழர் நலத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் உதவிட எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கி இருக்கும் இந்த தீ விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து…
குவைத்தின் தீ விபத்தில்
மனிதச் சதைகள்
கருகிய வாசம்
உலகக் காற்றில் வீசுகிறது
இறந்த பின்தான்
தகனம் செய்வார்கள்;
தகனம் செய்து
இறப்பைத் தந்திருக்கிறது
நெருப்பு
இதயத்தின்
மெல்லிய தசைகள்
மெழுகாய் உருகுகின்றன
உலகம்
தோன்றிய நாளிலிருந்து
விபத்துகள் புதியனவல்ல
விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்
அது தொடர்வது
பாதுகாப்பு அளவீடுகளின்
குறைபாடுகளைக் காட்டுகிறது
மனிதத் தவறுகள்
திருந்தவில்லை என்று
வருந்திச் சொல்கிறது
மாண்டவர்களுக்காக
அழுது முடித்த இடத்தில்
அழத் தேவையில்லாத சமூகத்தை
வார்த்தெடுக்க வழி சமைப்போம்
உலகத் தொழிலாளர்களுக்கு
என் இந்தியக் கண்ணீர்