ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றது அம்பதேக்கருக்கு செய்த துரோகம் என்கிறது விசிக.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விஜயதசமியை முன்னிட்டு நாடு முழுவதும் பேரணி நடத்து வது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். நடத்தும் இந்த பேரணியில் எல்.முருகன் பங்கேற்றது அம்பேத்கருக்கு செய்த துரோகம் என்று விசிக விமர்சித்துள்ளது.
அதாவது, ’’இந்துத்துவக் கட்டமைப்பில் தலித்துகள் சாதிக் கொடுமைகளை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பதே விதி. அந்த கொடுமை விதிகளை திருத்த வந்த புரட்சியாளர் அம்பேத்கர், இந்துத்துவத்துக்கு எதிராக இறுதி மூச்சு வரை களமாடினார்.
இந்து மதத்திலிருந்து பவுத்தம் தழுவிய நாள் இதே அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் 1956 ஆம் ஆண்டாகும். இந்துத்துவத்தை அழித்தொழிப்பதே புரட்சியாளர் அம்பேத்கரின் இலக்கு. ஆனால், எல்.முருகன் போன்றவர்கள் அம்பேத்கருக்கு துரோகம் செய்து விட்டு தான் பேரணியில் பங்கேற்கிறார்கள்’’ என்கிறார் விசிகவின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு.