லக்கிம்பூர் கேரியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. 8 பேரை பலிகொண்ட அந்த சம்பவத்தை மறந்து கடந்து போயிவிட முடியாது . அந்த மண்ணில் இருந்து ஒரு பகீர் குரல் எழுந்திருக்கிறது. கேரளாவைத் தொடர்ந்து அதே குரல் இந்த மண்ணில் இருந்தும் எழுந்திருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா, காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகளும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையில் பத்திரிகையாளர் உள்பட 4 பேர் உயிரிழந்தார்கள்.
நாடுமுழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்னர், ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதும் கூட விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.
விவசாயிகள் ஒன்றிய பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கும்போது, லக்கிம்பூர் கேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு வாக்கு பதிவாகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டினால் லக்கிம்பூர் கேரியில் பரபரப்பு நிலவுகிறது.
10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் இன்று காலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதற்கொண்டே பல்வேறு சலசலப்புகள் எழுந்துள்ளன. சமாஜ்வாதி கட்சி அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கனோஜ் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமம் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் உத்தரபிரதே மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி தொகுதியில் சமாஜ் வாதியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரை சின்னத்திற்கே வாக்கு விழுகிறது என்று வாக்காளர்கள் சொல்லி வருகின்றனர். இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கூறியும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் தொடர்ந்து தேர்தலை நடத்தி வருகின்றனர் என்று அத்தொகுதி மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
விவசாயிகளை காரை ஏற்றிக்கொன்ற ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தை அஜய் மிஸ்ராதான் லக்கிம்பூர் தொகுதியில் போட்டியிடுவதால், அவர் மீது அத்தொகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் இருப்பதால், எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் விழுகிறது என்ற குற்றச்சாட்டு, நேர்மையான வழியில் இத்தொகுதியில் வெல்ல முடியாது என்பதால் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா? என்ற சந்தேகங்கள் மற்றும் மக்களின் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன.
கேரள மாநிலத்தின் மாதிரி வாக்குப்பதிவில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு 2 வாக்குகள் பதிவாகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது லக்கிம்பூர் கேரி வாக்குப்பதிவில் இதே குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.