ஒரு டாக்டரை நோயாளியின் மகன் மருத்துவமனைக்குள்ளேயே கத்தியால் வெட்டுகிறார். பெண் ஆசிரியரை ஓர் இளைஞர் அரசுப் பள்ளிக்குள்ளேயே நுழைந்து கத்தியால் சரமாரியாகக் குத்தி உயிரைப் பறிக்கிறார். ஒரு வழக்கறிஞரை நீதிமன்றத்திற்கு முன்பாகவே ஒருவர் கத்தியால் வெட்டுகிறார். தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த இந்த கொடூரங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்ற இன்னும் சில நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று நிகழ்வுகளிலும் காவல்துறை தனது நடவடிக்கை குறித்து விளக்கமாகத் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய தாக்குதலின் பின்னணி என்ன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் மீதான தாக்குதல்தான் அவரது தொழில்சார்ந்த காரணமாக அமைந்துள்ளது. மற்ற இரண்டிலும் தனிப்பட்ட காரணங்களால் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்கால நிகழ்வுகளைத் தொகுத்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து கண்டன அறிக்கையினை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். பெண் ஆசிரியர் கொலை தொடர்பாக ஆளும் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தொடங்கி மற்ற தோழமைக் கட்சிகளும் தமிழ்நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
எந்தவொரு ஆட்சிக்காலத்திலும் தனிப்பட்ட விரோதங்கள் தொடர்பான தாக்குதல்கள் நடைபெறுவதும், அது குறித்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கம்தான். அ.தி.மு.க ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது பட்டப்பகலில் ஆசிட் வீசப்பட்டது தொடங்கி, வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மீதான கொலைவெறித்தாக்குதல் உள்பட பலவும் ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களாலேயே கூலிப்படையினைக் கொண்டு நடத்தப்பட்டது. குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான இனவெறித் தாக்குதலின் கொடூர நிகழ்வுகள் இன்றளவும் விவாதிக்கப்படுகின்றன. எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்த நீண்ட பட்டியலே உள்ளது.
குஜராத் கலவரம் போலவோ, இந்திராகாந்தி படுகொலையின் போது டெல்லி உள்ளிட்ட இடங்களில் பரவிய வன்முறை போலவோ, பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியாவின் பிற மாநிலங்களில் ஏற்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் போலவோ தமிழ்நாட்டில் பொது அமைதியைக் குலைக்கின்ற தொடர் வன்முறைகள் இதுவரை பெரியளவில் நடந்ததில்லை. வடமாவட்டங்கள்-தென்மாவட்டங்கள் ஆகியவற்றில் ஏற்பட்ட சாதிக் கலவரங்கள்கூட ஒரு குறிப்பிட்ட அளவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதான், தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புமாகும். தனிப்பட்ட தாக்குதல்ளை சாதி, மத, இன ரீதியான வன்முறையாக மாற்றும்போது சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, மாநிலத்தின் அமைதி குலைந்து போகும்.
அண்மையில் நடந்த தாக்குதல்கள் தொடர்பான எதிர்க்கட்சிகளின் கண்டன அறிக்கைகளுக்கு பதில் தருவதற்கு ஆளுந்தரப்பிடம் நிறைய தரவுகள் உள்ளன. எனினும், பொதுமக்களின் எதிர்பார்ப்பு என்பது இத்தகயை நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும் என்பதுதான். கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்பான நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் காவல்துறையிடம் உள்ளது. அதற்கு பொறுப்பு வகிப்பவர் முதலமைச்சர். அதனால், மக்களின் எதிர்பார்ப்பும் கூடுதலாகவே இருக்கும். எதிர்க்கட்சிகளின் கண்டன அறிக்கைகளில் இடம்பெறும் வார்த்தைகளும் காரமாகவே இருக்கும். அதற்கு செயல்கள் மூலமான பதில்களே சரியானதாக அமையும். எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நியாயமானதுதானே என்று மக்கள் நினைக்கிற சூழல் அமைந்தால் சட்டம்-ஒழுங்கு விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலான நிலை ஏற்படும்.
தகவல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து, தொலைக்காட்சிகள் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களும் உடனுக்குடன் செய்திகளைப் பரப்புகிற காலம் இது. இந்தளவுக்கு சமூக வலைத்தளங்கள் இல்லாத 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த தாக்குதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது தமிழ்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதுபோலவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியபோது போலீஸ் நடத்திய தடியடியில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, நீதிபதி ஒருவரும் தாக்கப்பட்ட படங்களும் காட்சிகளும் மக்களிடம் ப்தற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமின்றி, நீதிமன்றத்தின் கடும் கண்டனத்தையும் அரசு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
காவல்துறை-உளவுத்துறை ஆகியவை தங்கள் கடமையில் சற்று கண் அயர்ந்தாலோ, துறை சார்ந்த பிரச்சினைகளால் திசை திருப்பப்பட்டாலோ மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் சவாலை எதிர்கொண்டே ஆகவேண்டும். டாக்டர்-ஆசிரியர்-வழக்கறிஞர் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான நடவடிக்கையும், மருத்துவமனை-பள்ளிக்கூடம்-நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களில் உரிய பாதுகாப்பும் ஏற்படுத்தியாக வேண்டியது கட்டாயமாகும். அலட்சியம், அமைதிக்கு பங்கம்.