நடுரோட்டில் பஸ், வாகனங்களை எல்லாம் போகவிடாதபடி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டு பிறந்த நாள் கொண்டாடும் பேர்வழி லெப்ட் பாண்டி. தவெக தேனி மாவட்ட தலைவரான இவர் இப்போது தவெக நிர்வாகியை மிகவும் தரக்குறைவாக, ஆபாசமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
தேனி மாவட்டத்தில் வடுகபட்டியைச் சேர்ந்தவர் சத்யா நந்தகுமார். இவர் தேனி மாவட்ட தவெக மகளிர் அணிச் செயலாளராக உள்ளார். இவர் தற்போது வெளியிட்ட வீடியோ பதிவு ஒன்று தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து தவெக வரையிலும் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது தலைமைக்கு தன்னைப்பற்றி தவறான தகவல்களை கொடுத்து பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் தவெக தேனி மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு செயலாளர்கள் மீது குற்றம்சாட்டி இருந்தார்.
தன் மீது காவல்துறையில் எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்று காவல்துறையினரிமே சான்றிதழ் வாங்கி வைத்திருக்கும் நிலையில் தன் மீது காவல்துறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று இரு மாவட்ட செயலாளர்களும் தவறான தகவலை தலைமைக்குச் சொல்லி தன்னை காலி செய்யப் பார்க்கிறார்கள் என்று குமுறியிருந்தார்.
அசராத தனது கட்சிப்பணியால் தலைமை வரைக்கும் தன் பெயர் தெரிந்துவிட்டது என்கிற ஆத்திரத்தில் இப்படிச் செய்கிறார்கள் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
சத்யா நந்தகுமாரின் வீடியோ வைரலாகி தவெக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தவெக தேனி தெற்கு மாவட்ட தலைவர் லெப்ட் பாண்டி இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார். சத்யா சொல்லுவது முழுக்க முழுக்க பொய் என்றும், யாருடைய தூண்டிதலினாலோ இப்படி பேசுகிறார் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சத்யா நந்தகுமாரை ஒருமையில் பேசி, அவரின் ஆடை குறித்தும் அருவறுப்பாக ஆபாசமாக பேசி தே… என்றும் கடுமையாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் பாண்டி.
இந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூராக நடுரோட்டில் காரை நிறுத்திக்கொண்டு பிறந்தநாள் கொண்டாடியவர் லெப்ட் பாண்டி. கிரேன் மூலம் ராட்சச மாலை கொண்டு வந்து லெப்ட் பாண்டி கழுத்தில் அணிவித்தனர் ஆதரவாளர்கள். இந்த அலப்பறையைக் கண்டு கொதித்த போலீசார் பாண்டி மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
அப்போதும் பாண்டியை கண்டிக்கவில்லை விஜய். இப்போதும் இந்த விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்தும், விஜய்யும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தவெகவினர் இடையே அதிருப்தி நிலவுகிறது.