
அதிகாரப் போட்டியில் தனக்கான இடத்தை தக்க வைக்க டெல்லிக்கு சென்றுகூட மோதிப்பார்த்தார் அன்புமணி. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஏ பார்ம், பி பார்ம் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரம் தலைவராகிய தனக்குத்தான் உள்ளது என்பதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் நிரூபிக்க அன்புமணி எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. ராமதாசை மீறி அன்புமணிக்கு உதவ மறுத்து கையை விரித்துவிட்டது பாஜக தலைமை.
டெல்லி செல்வதற்கு முன்பாக பாமகவை முதலில் உடைத்துக்கொண்டு வெளியேறி கட்சிக்கு சொந்தம் கொண்டாடிய பாமகவின் முதல் எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து, அவர் பாமக அதிகாரத்தை கைப்பற்ற எடுத்த முயற்சிகளின் போது என்ன நடந்தது? என்பதை தெரிந்துகொண்டால் அந்த அனுபவங்களை தனது முயற்சிகளுக்கு பக்கத்துணையாக வைத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அவரிடன் கேட்க, அவரும் அந்த அனுபவங்களை அன்புமணியிடம் பகிர்ந்துகொண்டார்.

இதை தெரிந்துகொண்ட ராமதாஸ், அன்புமணி டெல்லிக்கு செல்வதற்கு முன்பாகவே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி விட்டார். அதாவது, கடந்த மே மாதம் 28ஆம் தேதியுடன் அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டது என்றும், பாமகவின் சட்ட விதிகளின்படி மறுநாள் 29ஆம் தேதி அன்று பாமக தலைவராக ராமதாஸ் ஆகிய தான் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து கடந்த 5ஆம் தேதி அன்று நடந்த பாமக நிர்வாகக்குழு கூட்டத்தில், நிர்வாகக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார் என்றும், பாமகவின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றும், பாமகவில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு ஏ பார்ம், பி பார்ம் விண்ணப்பத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை பாமக நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு தனக்கே அளித்துள்ளது என்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் ராமதாஸ்.

இதனால்தான் அன்புமணி டெல்லியில் முகாமிட்டிருக்கிறாரே? என்ற கேள்விக்கு, ’’இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார் ராமதாஸ்.
டெல்லி என்ன எங்கு சென்றாலும் தன்னை மீறி அன்புமணியால் எதுவும் செய்ய முடியாது என்பதால்தான் சிரித்தபடியே அன்புமணியின் டெல்லி மூவ்களை ரசித்திருகிறார் ராமதாஸ்.
தலைமை நிர்வாகக்குழு, செயற்குழுவைத் தொடர்ந்து பொதுக்குழுவை கூட்டவும் ஆயத்தமாகி வரும் ராமதாஸ், பொதுக்குழுவில் அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து தூக்குவதோடு மட்டும் அல்லாமல் அவரை கட்சியில் இருந்தே நீக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது தைலாபுரம் வட்டாரம். அப்படி ஒன்று நடந்தால் பாமக இரண்டாக உடைவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறது பனையூர் வட்டாரம்.

இந்நிலையில் இன்று தனது பேச்சைக் கேட்காதவர்கள் தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்றும், வேண்டுமானால் தனது இனிஷியலை பயன்படுத்துக் கொள்ளலாம் என்றும் அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் ராமதாஸ். தான் சொன்னதைக் கேட்டு கட்சியின் செயல் தலைவராக செயல்படாமல் தலைவராகத்தான் இருப்பேன் என்று எதிர்த்து நிற்பதால், ’’தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. தசரதன் சொன்னதைக் கேட்டு ராமர் வனவாசம் சென்றார்’’ என்று சொல்லி, அன்புமணி அது மாதிரி தந்தை சொல் மிக்க மந்திரம் என வாழவில்லை என்பதை மறைமுகமாகச் சாடி இருக்கிறார்.