இந்தியாவில் முதல்முறையாக பால் புதுமையினர்(LGBTQIA+) கொள்கையை வகுக்க கடந்த 2023 ஜூலை மாதத்தில் குழு அமைத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
கொள்கையை வகுப்பத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் பால் புதுமையினர் சமூகத்தினர் இணைந்து செயல்படுவதை பாராட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், பால் புதுமையினரின் மேம்பாட்டுக்காக தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை இது வெளிப்படுத்துவதாக கூறினார்.
பால் புதுமையினர் குறித்த வழக்கு ஒன்றில், தமிழ்நாடு அரசு வகுத்து வரும் கொள்கை தொடர்பான நிலை அறிக்கையை(Status Report) சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 29-ம் தேதி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.
நிலை அறிக்கையோடு சேர்த்து 11 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டு வரும் பால் புதுமையினர் வரைவுக் கொள்கையை சீலிடப்பட்ட கவரில் தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
அரசு சமர்ப்பித்த வரைவு கொள்கையை பாராட்டிய நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், மாநிலத்தில் உள்ள திருநங்கைகள் மற்றும் தனியர்களுக்கு (Intersex) கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் கொள்கை, காப்பீட்டுத் தொகை, சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்ககளை வரவேற்றுப் பாராட்டினார்.
கொள்கை குறித்து மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், கொள்கையை வெளியிடுவதற்கு முன் இறுதி வரைவில் பொதுமக்களின் கருத்தை சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பரிந்துரைத்தார்.
பால் புதுமையினரின் மேம்பாட்டிற்காக அவர்களுக்கென புதிய தன்னாட்சி மாநில ஆணையத்தை அமைக்கவும் கொள்கை பரிந்துரைத்துள்ளது.
திருநம்பிகளையும்(Trans-Masculine) உள்ளடக்கும் வகையில் ஏற்கனவே உள்ள தமிழ்நாடு திருநங்கை(Trans-Feminine) நல வாரியத்தின் பெயரை, தமிழ்நாடு திருநர் நல வாரியமாக மாற்றவும் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனைத்து LGBTQIA+ சமூக உறுப்பினர்களையும் கொள்கை வகுக்கும் போது பரிசீலிக்கப்பட்டதையும் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
இறுதி கொள்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியியிட மாநில அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம், மாநிலம் தழுவிய பொது ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, கருத்துகளை பெறவும் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.