எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் ஆங்கிலம் தவிர்க்கப்பட்டு, இந்தி மொழி மட்டுமே இடம்பிடித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் தமிழ் உள்ளிட்ட மொழிகளைப் பேசுகின்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள். ஒரு நாடு-ஒரு தேர்தல் என்பதுடன் ஒரே மொழி, அது இந்தி என்பதே மத்திய பா.ஜ.க. அரசின் திட்டம். அதன் செயல்பாடுகளில் உள்ள நரித்தனத்தை நன்கறிந்த மாநிலம் தமிழ்நாடு. அரை நூற்றாண்டுகாலத்திற்கு முன்பாகவே மத்தியில் ஆள்கின்றவர்களின் சூழ்ச்சியை அறிந்து அதற்கெதிரானப் போராட்டத்தை நடத்தி, தமிழ் மொழியையும் அவரவர் தாய்மொழியையும் இந்தி ஆதிக்கத்திலிருந்து காத்திட்ட பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அதுபோலத்தான், எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தித் திணிக்கப்பட்டதை எதிர்த்து தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடங்கி தமிழர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டனர்.
அடக்குமுறையை ஏவுவதும், எதிர்ப்பை சமாளிக்க முடியாவிட்டால் சரணாகதி அடைந்து கதறுவதும் ஆரியத்தின் இயல்பு. ஆரியப் பண்பாட்டின் வழி உருவான இந்தி மொழியைத் திணிக்க நினைப்பவர்களின் இயல்பும் அதுதான். தமிழ்நாட்டிலிருந்து கண்டனக் குரல்கள் வெளிப்பட்டதும், “எல்.ஐ.சி.யின் இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆங்கில விவரங்கள் வெளியாகாமல், இந்தி மட்டுமே வெளியானது. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டதால் தற்போது ஆங்கிலம்-இந்தி இரு மொழிகளிலும் இணையதளம் இயங்குகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் வாயிலாக இப்படிப் பல முறை இந்தித் திணிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, எதிர்ப்பு வலுத்ததும், ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று பின்வாங்கிய வரலாறு உண்டு. ரயில்வே துறையிலும், அஞ்சல் துறையிலும், பி.எஸ்.என்.எல். போன்ற தொலைத்தொடர்புத் துறையிலும் இதே நடவடிக்கைகளை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள்-இருப்பவர்கள் மேற்கொள்வதும், தமிழ்நாட்டிலிருந்து முதல் எதிர்ப்புக் குரல் வெளிப்பட்டு, அது பிற மாநிலங்களிலிருந்து ஒலிக்கத் தொடங்கியதும் பின்வாங்குவதும் தொடர்கதையாகவே இருக்கிறது. நேரடியாக இந்தித் திணிப்பு செய்ய முடியாத நிலையில், பின்வாசல் ரகசிய வழிகளைக் கையாள்வதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தி மொழி என்பது தமிழர்களுக்கு வில்லன் அல்ல. மும்பை தாராவி உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் தமிழர்கள் நன்றாக இந்தி பேசக்கூடியவர்கள். அதே நேரத்தில், மும்பையிலும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் பிற பகுதிகளிலும் இந்தி மொழியின் தாக்கத்தால் தாய்மொழியான மராட்டியம் பின்தள்ளப்பட்டு விட்டது என்ற குரல்கள் ஒலிக்கின்றன. போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. மேற்குவங்காளத் தலைநகர் கொல்கத்தாவில் இந்தி திவாஸ் எனப்படும் இந்தி நாள் (செப்டம்பர் 14) அன்று அங்குள்ளவர்கள் தங்களின் வங்காள மொழியைக் காத்திட பேரணி, கருத்தரங்கம் என நடத்துகிறார்கள். கர்நாடகாவில், அசாமில் இன்னும் சில மாநிலங்களில் தங்கள் தாய்மொழி மீது இந்தி ஆதிக்கம் செலுத்துவதைக் கண்டித்துக் குரல்கள் ஒலிக்கின்றன. இத்தகைய ஆதிக்கத்தைத்தான் அன்றே எதிர்த்தது தமிழ்நாடு. இங்குள்ள திராவிடக் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகளின் முன்னெடுப்பும் தொலைநோக்குப் பார்வையும்தான் இந்தி ஆதிக்கத்திலிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தது. இந்த வரலாற்றைப் புரிந்துகொண்டுள்ள பிற மாநிலத்தவர்களும் தங்கள் தாய்மொழியைக் காப்பதற்கான உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எல்.ஐ.சி இணையதளத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் தொழில்நுட்பக் கோளாறைத் தாண்டி, இந்தி விவகாரத்தில் இன்னும் பல தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளன. இந்தி, இந்தியாவின் தேசியமொழி என்பது முதல் தொழில்நுட்பக் கோளாறு. இந்தி என்பது தேசியமொழி அல்ல. அது மத்திய அரசின் அலுவல் மொழி. அதிலும் இந்தி மட்டுமே அலுவல் மொழி என நினைத்து அந்த மொழியிலேயே பதில் அளிப்பது இரண்டாவது தொழில்நுட்பக் கோளாறு. ஏனெனில், இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. இந்தி பேசாத மக்கள் உள்ள மாநிலங்களுக்கானத் தொடர்பு மொழி ஆங்கிலம்தான்.
இந்தியாவில் இந்தி பேசுகிற மக்கள்தான் அதிகம் என்பது மூன்றாவது தொழில்நுட்பக் கோளாறு. இந்தி பேசுகிற மக்கள் குறிப்பிட்ட அளவில் இருந்தாலும், இந்தி பேசாத மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அசாம், பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட மாநில மக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே அதிகம்.
மற்றொரு முக்கியமான தொழில்நுட்பக் கோளாறு என்னவெனில், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் உள்ளன. இவை அனைத்துமே இந்திய மொழிகள் என்பதை மத்தியில் ஆட்சி செய்பவர்கள் உணர்வதேயில்லை. இந்தியைத் திணிப்பதற்குப் பதில், இந்த அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சிமொழிகளாக அறிவிக்க வேண்டும். இன்னும் சில மொழிகளையும் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இந்தி மொழியின் ஆதிக்கத்திற்குள்ளாகி அழிவின் விளிம்பில் உள்ள உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மைதிலி, போஜ்புரி, சந்தாலி, அவதி போன்ற மொழிகளின் வளர்ச்சிக்குத் திட்டமிடவேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இவையெல்லாம் சாத்தியம்தான். ஆனால், இந்திதான் எல்லாமும் என ஆள்பவர்கள் நினைத்தால் தொழில்நுட்பக் கோளாறு ஒருபோதும் சரியாகாது.