- கோவி.லெனின்
வாரணாசி தொகுதியின் ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவு என்ற செய்தி வெளியாகி, பின்னர் அடுத்த சுற்றில் அவர் சற்று முன்னிலை பெற்றதும் ‘மரண பயத்தைக் காட்டிட்டானுங்க பரமா’ என்ற லெவலுக்கு பா.ஜ.க.வைக் கொண்டு சேர்ந்திருக்கிறது.
கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்த பா.ஜ.க. இந்த முறை தனது தேசிய ஜனநாயகக் கட்சியில் உள்ள கட்சிகளின் துணையுடன்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. (முழு முடிவுகள் வரும்போது இறுதி நிலவரம் தெரிய வரும்)
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் இந்த இரண்டு கட்சிகள்தான் இப்போது மோடியைத் தாங்கிப்பிடித்துள்ளன. அதுபோலவே இன்னொரு பார்ட்னர் கர்நாடகா தேவேகவுடாவின் மதச்சார்ப்பற்ற ஜனதாதளம். இவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் எப்படிப்பட்டவை, எத்தனை காலம் நம்பகத்தன்மையுடன் இருப்பார்கள் என்பது அரசியலை உற்றுக் கவனிப்பவர்களுக்கு நன்கு தெரியும்.
அதே நேரத்தில், பா.ஜ.க.வின் தனிப்பெரும்பான்மையைத் தகர்க்கும் சக்திகளாக விளங்கிய மாநிலக் கட்சிகள் இந்தத் தேர்தல் களத்தில் கவனத்திற்குரியவை. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியாக உருவாக்கினால் மகத்தான வெற்றி பெற முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலேயே நிரூபித்தவர் தி.மு.க. தலைவர் மு..க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்பதை தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிரூபித்தது. இந்தத் தமிழ்நாடு ஃபார்முலாதான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளம்.
இந்தியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டத்திலேயே அந்தந்த மாநிலத்தில் செல்வாக்குள்ள கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். அதற்கேற்ப கூட்டணி ஒருங்கிணைப்பு அமைய வேண்டும் என வலியுறுத்தியவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அத்துடன், தமிழ்நாட்டில் தனது தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சிகளுக்கு உரிய அளவில் இடங்களைப் பகிர்ந்து கொடுத்தார். கட்சிக்குத் தலைமையேற்று அவர் சந்தித்த 2019, 2021, 2024 எனத் தொடர்ச்சியானத் தேர்தல் களங்களில் தி.மு.க.வை பெரும் வெற்றிக்கு இட்டுச் சென்றிருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டினாலே இந்தியாவில் உள்ள இந்துக்கள் அத்தனை பேரும் பா.ஜ.க.வுக்கு ஓட்டுப் போட்டு விடுவார்கள் என நம்பியிருந்த மோடி-அமித்ஷாவுக்கு அயோத்தி அமைந்துள்ள உத்தரபிரதேச மாநிலமே கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. காரணம், மாநிலக் கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ்யாதவ் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மேற்கொண்ட வியூகமும், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி செய்த பரப்புரையும் உத்தரபிரதேசத்தில் அந்தக் கூட்டணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளது.
பா.ஜ.க கோட்டையாக நம்பிய உத்தரபிரதேசத்தில் ஓட்டையைப் போட்டதிலும் பா.ஜ.க.வுக்குப் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்ததிலும் மாநிலக் கட்சியான சமாஜ்வாடிக்குப் பெரும் பங்கு உள்ளது.
பீகாரிலும் இதே போன்ற கூட்டணியை ‘இந்தியா’ அமைத்தது. மாநிலக்கட்சியான ஆர்.ஜே.டி.யின் தேஜஸ்வி யாதவ், காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து களம் கண்டார். ஆனால், இந்தியா கூட்டணியிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் தாவிய அதே மாநிலத்தின் மற்றொரு மாநிலக் கட்சியும் ஆளுங்கட்சியுமான நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், இந்தியா கூட்டணியின் வெற்றிக்கனவை பீகாரில் தகர்த்துவிட்டது. பீகாரில் இன்னும் அதிகளவில் எண்ண வேண்டிய வாக்குகள் மிச்சமிருப்பதால், இந்தியா கூட்டணி நம்பிக்கையுடன் உள்ளது.
பீகாரில் நிறைவேறாதததை மகாராஷ்ட்ரா சாதித்துக் காட்டியிருக்கிறது. அங்கு இரண்டு மாநிலக் கட்சிகள் முக்கியமானவை. ஒன்று, சிவசேனா. மற்றொன்று, தேசியவாத காங்கிரஸ். இரண்டு கட்சிகளையும் பா.ஜ.க உடைத்தது. எனினும், அக்கட்சிகளின் தொண்டர்கள் உண்மையானத் தலைமையின் மீது கொண்டிருந்த உறுதியும், அந்தக் கட்சிகள் இந்தியா கூட்டணியில் காங்கிரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டதாலும் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளன.
மேற்குவங்கத்தின் முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணையாமல் தனித்து நிற்பதாக அறிவித்தபோது, இந்தியா கூட்டணியில் சுணக்கமும் சோர்வும் ஏற்பட்டாலும், தேர்தல் முடிவுகளோ மம்தா எடுத்த நிலைப்பாடு சரிதான் என்பதைக் காட்டியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் சொந்த மாநிலத்தில் தங்களுக்குள்ள பலத்தையும், தேசிய அளவிலானக் கண்ணோட்டைத்தையும் சரியான முறையில் கொண்டிருக்கும் கட்சிகள் இந்த முறை பெரியளவில் சாதித்துள்ளன. ஒடிசாவில் நவீன் பட்நாய்க்கின் பிஜூ ஜனதாதளம், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ்வின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய மாநிலக் கட்சிகளின் தன்னிச்சையானப் போக்குகள் அவற்றிற்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கியுள்ளன.
ஒற்றையாட்சி முறையைக் கொண்டு வருவதை தனது மூன்றாவது முறை ஆட்சிக்காலத்தின் திட்டமாக வைத்திருந்த பா.ஜ.க.வின் எண்ணத்திற்கு கடிவாளம் போடக்கூடிய அளவிலான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் மாநிலக் கட்சிகளின் பங்கு முக்கியத்துவம் பெறுகின்றன. நம்பிக்கை மிகுந்த கூட்டணிக் கட்சிகளைக்கொண்ட இந்தியா கூட்டணி இதை சாத்தியமாக்கியிருக்கிறது.
நம்பிக்கைக்குப் பாத்திரமில்லாத கூட்டணிக் கட்சிகளை நம்பியுள்ள பா.ஜ.க.வின் நிலை என்ன முழுமையானத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் தெரிய வரும். முதல்கட்டமாக, பா.ஜ.க.வின் இறுமாப்பைத் தகர்த்துள்ளது இந்தியா கூட்டணி.