ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து இல்லாததால் மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
இந்த சபாநாயகர் தேர்தலில் போட்டியின்றி தேர்தல் நடத்தி வெல்ல ஒன்றிய பாஜக அரசு எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வி அடைந்துவிட்டன. தேர்தலில் போட்டியில்லாமல் ஒருமித்த கருத்தை பாஜக விரும்பின. ஆனால், மக்களவை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுத்தால் துணை சபாநாயகர் பதவியை தர வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் நிபந்தனையை பாஜக ஏற்கவில்லை. இதனால் ஒருமித்த கருத்துக்கு ஆதரவு இல்லாததால் தேர்தல்தான் என்பது உறுதியாகிவிட்டது.
18வது மக்களவையின் முதலாவது கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், நாளை மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருமனதாக போட்டியின்றி ஒருவரை தேர்ந்தெடுப்பதுதான் வழக்கம். ஆனால் 18வது மக்களவையில் இந்த நடைமுறை மாறியிருக்கிறது.
போட்டியில்லாமல் ஒரு மனதாக சபாநாயகரை தேர்தெடுத்துவிடலாம் என்று நினைக்கும் பிரதமர் மோடி, இது தொடர்பாக இந்தியா கூட்டணியினரிடம் நேடிடையாக பேசாமல் ஊடகம் மூலமாக பேசியிருப்பது இந்தியா கூட்டணியிருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கே.சி.வேணுகோபால், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் கார்கேவிடமும் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
சபாநாயகர் பதவிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால், துணை சபாநாயகர் பதவியை இந்தியா கூட்டணிக்கு விட்டுக்கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனைக்கு பாஜக ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் ராகுல்காந்தியும் அதிருப்தி அடைந்து, பிரதமர் மோடியும், ஒன்றிய அரசும் இந்தியா கூட்டணி கட்சிகளை அவமதித்துவிட்டது என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜ்நாத்சிங்கும் கார்கேவிடம் இதை வலியுறுத்தி இருக்கிறார். ஆளுங்கட்சி வேட்பாளரை நாங்கள் ஆதரிக்க தயார். அதே நேரம், துணை சபாநாயகர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு, கட்சியினரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று கார்கேவிடம் சொன்ன ராஜ்நாத்சிங், அதன் பின்னர் பதிலேதும் பேசவில்லை. இதனால் வேறு வழியின்றி இந்தியா கூட்டணி சார்பி சுரேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.
18வது மக்களவையின் சபாநாயகர் பதவிக்கு பாஜகவும், காங்கிரசும் களமிறங்கி இருக்கின்றன. நாளை நடைபெறும் இந்த தேர்தலில் மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஓம் பிர்லா – கொடிக்குன்னில் சுரேஷ் இருவரில் யாருக்கு பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகள் கிடைக்கிறதோ அவர் மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிக உறுப்பினர்கள் உள்ளதால் அநேகமாக ஓம் பிர்லாதான் இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.