லாட்டரி மார்ட்டின் மூலமாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் கைகோர்க்க முயற்சித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
பி.கே. என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பொது சுகாதார ஆய்வாளரான இவர் 8 வருடங்கள் ஐநாவில் பணிபுரிந்தவர். காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், திமுக என்று இந்தியாவில் பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணி புரிந்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசில் இவர் பணியாற்றுவதாக இருந்தது. ஆனால் கட்சியில் இவர் முக்கிய பொறுப்புகளை கேட்டு நிபந்தனை விதித்ததால் காங்கிரஸ் தலைமை அதற்கு ஒப்புக்கொள்ளாததால் காங்கிரசுக்கு பணியாற்றவில்லை. இதனால் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வந்தார்.
தனிக்கட்சி தொடங்குவதற்காக பாத யாத்திரை எல்லாம் மேற்கொண்டார். தவெகவை தொடங்குவதற்கு முன்னதாக விஜய்யை சந்தித்து பேசினார். இதனால் அவர் விஜய் கட்சிக்கு பணியாற்றப்போகிறார் என்று செய்திகள் வந்தன. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இவர் மீண்டும் திமுகவுக்கு பணியாற்றப்போவதாக பேச்சு எழுந்தது.
தற்போது அவர் ‘ஜன் சுராஜ்’ எனும் தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார். பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார்.
2025 பீகார் சட்டமன்ற தேர்தலை கணக்கில் வைத்து ஓடிக்கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோரை 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுகவுக்கு பணியாற்ற அழைத்து வர முயற்சித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவுக்காக வேலை செய்தவர் ஆதவ் அர்ஜூன் ரெட்டி . அவர் இப்போது விசிகவில் துணை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவரின் மாமனார் லாட்டரி மார்ட்டின். இவரைத்தொடர்பு கொண்டு, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேவைப்படுகிறார். எப்படியாவது நீங்கள்தான் அவரிடம் பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கேட்டிருப்பதாக தகவல்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பணியாற்றச்சொல்லி கடந்த 2019ம் ஆண்டிலேயே டெல்லி சென்று பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசி வந்தார் எடப்பாடி பழனிச்சாமி என்று அப்போது செய்திகள் பரவின. ஆனால் 2021ல் திமுகவுக்கு பணியாற்றினார் பி.கே. அதற்கு பிறகு இப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் பிகேவுடன் கைகோர்க்க திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.