வட மாநிலத்தில் தலைமறைவாக இருக்கும் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க விரைந்தது தனிப்படை.
கரூர் மாவட்டம் வாங்கல் கிராமம் பிரகாஷ், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பினாமி என்கின்றனர் அக்கிராமத்தினர். ஆனால், அவருக்கும் விஜயபாஸ்கருக்கும் இப்போது பிரச்சனையாகி அது விஜயபாஸ்கரை கைது செய்யும் அளவுக்கு கொண்டு போயிருக்கிறது.
தன் பெயரில் உள்ள 100 கோடி ரூபாய் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார் விஜயபாஸ்கர் என்று கரூர் போலீசில் புகார் அளித்திருந்தார் பிரகாஷ். இந்த புகாரை பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனால் தான் கைது செய்யப்படக்கூடும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட விஜயபாஸ்கர் தலைமறைவாகிவிட்டார். அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான, வடமாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில்தான் விஜயபாஸ்கர் பதுங்கியிருக்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியது விஜயபாஸ்கர் தரப்பு. இந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர் தனிப்படை போலீசார்.