
கழகத்திற்கு வெளியேதான் பிரச்சனை என்றால் கழகத்திற்கு உள்ளேயும் நாலாபுறமும் பிரச்சனைகளை எதிர்கொண்டு நிற்கிறது அதிமுக.
விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர் பாண்டியராஜன். மாஃபா தொழில் நிறுவனத்தை தொடங்கி தொழிலதிபர் ஆனார். தமிழக பாஜகவில் இயங்கி வந்த இவர், தேமுதிகவுக்கு சென்று விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதிமுகவுக்கு சென்று அங்கே ஆவடி தொகுதியில் நின்று வென்று அமைச்சர் ஆனார். அதன் பின்னர் ஓபிஎஸ் பக்கம் சென்றார். இபிஎஸ் -ஓபிஎஸ் இணந்த போது மீண்டும் அமைச்சர் ஆனார் பாண்டியராஜன்.
2021 தேர்தலில் ஆவடியில் தோல்வியுற்ற பின்னர் கட்சியில் தீவிர செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து தொர்ந்து அதிமுகவில் இருந்து வரும் பாண்டியராஜன், 2026 சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து, தொகுதி வேலைகளை கவனித்து வருகிறார் .

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் இக்கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சியின் போது போட்டி போட்டுக்கொண்டு மாஜி அமைச்சர்களுக்கும், மாவட்ட கழக நிர்வாகிகளுக்கும் மரியாதை செய்தனர் தொண்டர்கள். அப்போது பாண்டியராஜனுக்கு ஒரு தொண்டர் சால்வை அணிவிக்க வந்தபோது அவரை ஆவேசத்துடன் அடித்து தள்ளிவிட்டார் ராஜேந்திரபாலாஜி. இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
ஆனாலும் பாண்டியராஜன் ஆதரவாளர்கள் பலரும் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர்.
அந்த தொண்டரை ஏன் அடித்தேன்? என்று இன்று சிவகாசியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விளக்கம் தந்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

’’அதிமுகவில் நான் குறுநில மன்னன் என்கிறார்கள். ஆமாம், நான் குறுநில மன்னன் தான். மாவட்ட செயலாளர் நான் இருக்கும்போது அவருக்கு சால்வை அணிவிக்க விட்டு விடுவேனா? பல கட்சிகளுக்கு சென்றவருக்கு பொன்னாடையா? விருது நகரில் என்னை மீறி எதுவும் செய்ய முடியாது’’ என்று மிரட்டும் தொனியில் சொன்ன ராஜேந்திர பாலாஜி,
’’அதிமுக ரத்தம்தான் என் உடலில் ஓடுது. எனக்கு வரலாறு உள்ளது. உனக்கு என்ன இருக்கிறது. நீ பல கட்சிக்கு தாவிய ஆள். நான் சிபிஐக்கே பயந்தவன் கிடையாது. உன் மேல் வழக்கு வந்தா வேறு கட்சிக்கு போயிடுவ..’’ என்று ஒருமையிலும் பாண்டியராஜனை போட்டு வறுத்தெடுத்துள்ளார்.
ஒருபக்கம் செங்கோட்டையன் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் செல்லூர் ராஜூ – உதயகுமார் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது மாபா – ராபா பிரச்சனை. கழகத்திற்கு உள்ளே இப்படி என்றால், கழகத்திற்கு வெளியே நின்று ஓபிஎஸ், சசிகலா, தினகரன் போன்றோர் ஒரு வழி பண்ணாமல் விடமாட்டோம் என்று உரக்க குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
r1jil9