சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. இதைத்தொடர்ந்து மேலும் சில பத்திரிகையாளர்கள் சங்கங்களும் தேர்தல் நடத்தி சங்கத்தினை முறைப்படுத்த ஆயத்தமாகி வருகின்றன.
சேப்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 1502 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெண் உறுப்பினர்கள் 144 பேர் உள்ளனர்.
பல்வேறு காரணங்களைச் சொல்லி கடந்த 24 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனால் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படாமல் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன.
தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி மறைந்த எம்.யு.ஜே. மோகன் நீதிமன்றத்தை நாடியதால், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தேர்தலை நடத்த உத்தரவிட்டது நீதிமன்றம். ஆனாலும் தேர்தலை நடத்த போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தனது பதவியில் இருந்து விலகினார் மோகன்.
இதன் பின்னர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்கிற குரல்கள் வலுத்தன.
இந்த நிலையில்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்த ‘இந்து’ராம், நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் அடங்கிய ‘வழிகாட்டுதல் குழு’ அமைக்கப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்பட்டன. அடுத்த கட்ட நடவடிக்கையாக, உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வாக்களிக்க தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் நடந்த தேர்தலில் ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி, நீதிக்கான அணி என்று மூன்று அணிகள் போட்டியிட்டன. சுயேட்சைகளும் களத்தில் நின்றார்கள். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடந்தது.
தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 11 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் 91 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதாவது 1371 வாக்குகள் பதிவாகின.
தலைவராக சுரேஷ் வேதநாயகமும், பொருளாளராக மணிகண்டனும், பொதுச்செயலாளராக ஆசிப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ’’சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்புதிய நிர்வாகிகள் வாழ்த்து பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன்னும் சில கோரிக்கைகள் இருப்பதாகத் தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘Journalism’-த்திற்கும் ‘Sensationalism’-த்திற்கும் உள்ள வேறுபாட்டினையும், அவை சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் இளைய தலைமுறை ஊடகவியலாளர்களுக்குப் பயிற்றுவித்து, அறமுடன் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் உணர்த்திட வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார் முதலமைச்சர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த இந்த மாற்றத்தினை தொடர்ந்து மற்ற பத்திரிகயாளர்கள் சங்கங்களிலும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
பல ஆண்டுகலாக புதிய உறுப்பினர் சேர்க்கை இல்லாமல் இருந்த மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு (MRG) ( சென்னை நிருபர்கள் சங்கம் ) புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் மும்முரமாக உள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு அருகேதான் எம்.ஆர்.ஜி. உள்ளது. மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு (MRG)க்கு தமிழ்நாடு அரசின் மூலம் கிடைத்து வந்த அங்கீகாரம், நலத்திட்ட உதவிகளை மீண்டும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று நேற்று ஆலோசனைக்கூட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
இந்த ஆலோசனையின்படி புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இவ்வாண்டின் இறுதிக்குள் புதிய உறுப்பினர்களை சேர்த்த பின்னர், விரைவில் தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதெற்கன சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் அமைக்கப்பட்டது போலவே இங்கேயும் ‘வழிகாட்டுதல் குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
MRG வழிகாட்டுதல் குழுவில் மூத்த பத்திரிகையாளர்கள் ந.பா.சேதுராமன், ஏ.ஜெ.சகாயராஜ், தீபா, கீதன், ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.
இந்த குழுவின் வழி காட்டுதலில் விரைவில் MRGக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.