
மதுரை ஆதீனத்தில் 292வது ஆதீனம் அருணகிரிநாதர், 293வது ஆதீனமாக நித்யானந்தாவை கடந்த 27.4.2012ல் அறிவித்தார். இதனால் கடும் சர்ச்சைகள் எழுந்த நிலையில் அக்டோபர் 21ம் தேதி அன்று அந்த நியமனத்தை ரத்து செய்து அறிவித்தார் அருணகிரிநாதர்.
தனது நியமனத்தை ரத்து செய்ததை வாபஸ் பெறக்கோரி மதுரை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்தியானந்தா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் 2021ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி அன்று அருணாகிரிநாதர் மறைந்தார். அதையடுத்து மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார் நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் நித்தியானந்தா தொடர்ந்த வழக்கில் அருணகிரிநாதருக்கு பதிலாக தன்னை மனுதாரராக ஹரிஹர பரமாச்சாரியார் சேர்த்துக்கொள்ள கோரினார். அதன்படி நடந்த வழக்கில் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியாரை மதுரை நீதிமன்றம் அங்கீகரித்தது.
உடனே, ‘’முறைப்படி 293வது ஆதீனமாக நித்தியானந்தாவைத்தான் அறிவித்தார் அருணகிரிநாதர். ஆகவே, கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்று நித்தியானந்தா பீட நரேந்திரன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியாரரை நியமித்ததை இந்து சமய அற நிலையத்துறை அறிவித்துள்ளது. அதனால் அவர், 292வது ஆதீனத்திற்கு பதிலாக தன்னை மனுதாரராக இணைத்துக்கொள்ள கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததில் தலையிட தேவையில்லை என்று சொன்னவர், 293வது ஆதீனமாக 292வது ஆதீனம் அறிவித்தது செல்லுமா? செல்லாதா? என்பதை கீழமை நீதிமன்றம் சட்டம் பற்றிய தகுதி அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
இதன்பின்னர் நித்தியானந்தா தரப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் தெரிவித்தார்.