2024 -25 ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்காமல் ஏமாற்றத்தை அளித்தது பாஜக அரசு. மெட்ரோ ரயில் , வெள்ள நிவாரணம் உள்பட பலவற்றிலும் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய அரசு. மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்காக சொந்த மாநிலம் குஜராத்திற்கு 6500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.
தற்போதைய திமுக ஆட்சியில் மட்டும் இந்த நிலை இல்லை. அதிமுக ஆட்சியிலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. இதை அப்போது பாஜக கூட்டணியில் இருந்த அதிமுகவே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது.
கோவில்பட்டியில் அதிமுகவினருக்கு டிஜிட்டல் வடிவிலான புதிய அடையாள அட்டை வழங்கிய முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’ஒன்றிய பாஜக அரசில் கூட்டணியில் இருந்தபோது மதுரை எய்ம்ஸ், முல்லைப்பெரியாறு உள்ளிட்ட பிரச்சனைகள் பற்றி எடுத்துச்சொன்னோம். ஆனால் தமிழ்நாடு பிரச்சனைகள் குறித்து பாஜக அரசு செவிசாய்க்கவே இல்லை’’ என்கிறார்.
மேலும், ’’தமிழ்நாட்டு பிரச்சனைகளுக்கு செவிசாய்க்க வேண்டியவர்கள் அதைச்செய்யாமல் மாறாக அதிமுகவை உடைக்க சதி செய்தார்கள். அதனால்தான் ஒட்டும் வேண்டாம்; உறவும் வேண்டாம் என்று கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டோம்’’ என்கிறார்.