இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்ட்ரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. அதன் தோழமைக் கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும், சரத்பவாரிடமிருந்து பிரிந்த தேசியவாத காங்கிரசும் போட்டியிட்டதில் அதிக இடங்களை வென்றிருக்கிறது. காங்கிரஸ்-சரத்பவாரின் தேசியவாத காங்கிஸ்-உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மகாராஷ்ட்ராவின் 288 தொகுதிகளில் பா.ஜ.க-ஷிண்டே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 230 தொகுதிகளை வென்றிருப்பதால் எதிரணியான இந்தியா கூட்டணி மிகப் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும், காங்கிரசுக்கு 16 இடங்களும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுக்கு 20 இடங்களும் என 46 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பா.ஜ.க. கூட்டணியின் வெற்றிக்கான பொறுப்பினை அதானி தரப்பு ஏற்றுக்கொண்டதால் அதன் வெற்றி எளிதானது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதில் உண்மை இல்லாமல் இல்லை. அமெரிக்காவில் அதானி நிறுவனத்தின் மீதான வழக்கு மற்றும் பிடிவாரண்ட் தொடர்பான விவரங்கள் கூட மராட்டிய மாநில தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகே வெளியானது. ஒரு வாரத்திற்கு முன்பே அது வெளியாகியிருந்தால் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்கிறார்கள். யூகங்களை முழுமையான வியூகங்களாக எடுத்துக் கொள்ள முடியாது.
தேர்தலை எதிர்கொண்ட மற்றொரு மாநிலம், ஜார்கண்ட். அங்கே மொத்தமுளள 81 இடங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்சா 34 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 16 இடங்களையும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 4 இடங்களையும் வென்றுள்ளன. சி.பி.ஐ. எம்.எல். இரண்டு இடங்களை வென்றுள்ளன. இதனால் இந்தியா கூட்டணி ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைமையில் ஆட்சியை அமைக்கிறது. இந்த சட்டமன்றத் தேர்தல்களுடன் இடைத்தேர்தல்கள் நடைபெற்ற உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், பீகார் ஆகிய மாநிலங்களில் பெருமளவில் அந்தந்த மாநிலங்களின் ஆளுங்கட்சிகளே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியை, உத்தரபிரசேதத்தின் ரேபரேலியிலும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் வயநாடுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சியானதுதான் என்பதை மறுப்பதிற்கில்லை. ஜார்க்ண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் மராட்டியத்தில் மிகப் பெரும் தோல்வியை அது எதிர்கொண்டுள்ளது. அதிர்ச்சியளிக்கும் இந்த முடிவு குறித்து ஆய்வு நடத்தப்படும் என ராகுல்காந்தி தெரிவித்திருத்திருக்கிறார். முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டே ஆகவேண்டிய சூழலில் இந்தியா கூட்டணி உள்ளது.
பா.ஜ.க.வை பொறுத்தவரை, அது தன்னை நம்பி வரும் கட்சிகளை பிளவுபடத்தி, தன்னுடைய செல்வாக்கை வளர்த்துககொள்ளும் கட்சியாக உள்ளது. மராட்டியத்தின் சிவசேனாவில் தொடங்கி, தமிழ்நாட்டின் அ.தி.மு.க. வரை இதற்கான உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தன்னுடைய உண்மையான செல்வாக்கை சரியானபடி ஆராய்ந்து, அதற்கேற்றபடி தேர்தல் களத்தில் போட்டியிட வேண்டும். காங்கிரஸ் பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணி என்பது இந்தியாவைப் போலவே பன்முகத்தன்மை கொண்டது. எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த கட்சிக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறதோ அந்தக் கட்சி அதிக இடங்களில் போட்டியிடுவதே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் களம் நிரூபித்துள்ள நிலையில், மராட்டிய சட்டமன்றக் களத்தில் காங்கிரஸ் கடைப்பிடித்த அணுகுமுறை வெற்றி வாய்ப்பை பாதித்துவிட்டது என்று அங்குள்ள கூட்டணிக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், ஜார்கண்டில் முன்னாள் முதல்வர் சம்பை சோரன் பா.ஜ.க. பக்கம் சென்றாலும், சிறை மீண்ட முதல்வரான ஹேமந்த் சோரன் தனது ஜே.எம்.எம். கட்சியை வலுவாக வைத்திருந்ததால் அந்த மாநிலத்தில் ஜே.எம்.எம். அதிக இடங்களை வென்றதுடன் கூட்டணியில் உள்ள காங்கிரசும் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்க இடைத்தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை வென்றுள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி.யின் வெற்றியை தேர்தல் கணிப்பாளர் பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சி, தான் பெற்ற வாக்குகளால் பறித்திருப்பதும் தெரிய வருகிறது.
வலுவான கட்சிக் கட்டமைப்பும், சரியான தேர்தல் வியூகமுமே வெற்றியைத் தரும் என்பதை மகாராஷ்ட்ரா, ஜார்க்ண்ட் மற்றும் மாநில இடைத்தேர்தல்கள் நிரூபித்துள்ளன.