மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ர தேர்தலில் மகாயுதி கூட்டணி அபார வெற்றியை பெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்ற இறுதி முடிவு இன்னமும் எட்டாமல் உள்ளது. பாஜக தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் ஆகியோர் முதல்வர் ரேஸில் உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார்? என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசினார். நீங்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அப்போது என்னிடம் பிரதமர் சொன்னார். அதற்கு நான், இந்த விவகாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதியானது. அதற்கு நான் முழுவதும் கட்டுப்படுவேன் என்று சொன்னேன். அதே போல்தான் பிரதமர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.
மேலும், இந்த விவகாரத்தில் பாஜக முடிவு எடுக்கும். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவாக இருப்பேன். நான் தடைக்கல்லாக இருக்க மாட்டேன் என்பதை பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளேன். முதல்வர் யார் என்பதை பாஜக சொன்னால் சிவசேனா முழு ஒத்துழைப்பை வழங்கும் என்கிறார் ஏக்நாத் ஷிண்டே.
என்ன முடிவெடுக்கப்போகிறார் மோடி? என்று எதிர்பாத்திருக்கிறது மகாராஷ்டிரா.