மலையாளத் திரைக்கரையோரம் வீசத் தொடங்கிய புயல், இப்போது மற்ற மாநிலத் திரையுலகத்திற்குள்ளும் புகுந்து புறப்பட்டிருக்கிறது. கேரளாவில் பிரபலமான கதாநாயகிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து, சில ஆண்டுகளுக்கு முன் அவர் அளித்த புகாரில் இருந்து இந்த விவகாரம் புயலைக் கிளப்பியது. மலையாள சினிமாவில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து விசாரித்த ஹேமா கமிட்டியின் அறிக்கையில், திரைத்துறைக்கு வரும் நடிகைகள் மற்றும் இதர பெண் கலைஞர்களைத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள் என்றும், இது குறித்து புகார் தருவதற்கு திரைத்துறைப் பெண்கள் பயப்படுகிறார்கள் என்றும், எந்தளவுக்குப் பாலியல் சீண்டல்களுக்கு நடிகைகள் உடன்படுகிறார்களோ, அந்தளவுக்குத் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரம் கிடைக்கும் என்ற நிலை உருவாகக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை வெளியான பிறகு, மலையாளத் திரைப்பட நடிகைகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்ததுடன், புகாரும் அளித்துள்ளனர். “நடுராத்திரியில் வந்து கதவைத் தட்டிக் கூப்பிடுவார்கள்” என்று அச்சத்துடன் விளக்கியிருக்கிறார் ஒரு நடிகை. “அட்ஜஸ்ட்மெண்ட்”தான் சினிமா வாய்ப்புகளைத் தீர்மானிக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் இன்னொரு நடிகை. இந்தப் பாலியல் சீண்டல் புகார்களில் மலையாளத் திரையுலகின் முக்கியமான ஆண் நட்சத்திரங்கள் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் இடதுசாரி எம்.எல்.ஏ.வாக உள்ள முகேஷ், பா.ஜ.க. எம்.பி.யாக உள்ள சுரேஷ்கோபி மற்றும் சித்திக் போன்றவர்கள் ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மலையாள நடிகர்-நடிகையர் சங்கமான அம்மா அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து பிரபல நடிகர் மோகன்லாலும், அதன் மற்ற பொறுப்புகளில் இருந்த நடிகர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிலிருந்த அதிகாரமிக்க குழுக்களும் கலைக்கப்பட்டுள்ளன. இந்த அம்மா அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த நடிகைகள் அனன்யா, சரயூ இருவரும், “அமைப்பைக் கலைத்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. பாலியல் குற்றத்துக்கு ஆளானவர்கள்தான் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நாங்கள் ராஜினாமா செய்யவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோலவே சில நடிகர்கள் தரப்பிலிருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“யாரும் இங்கே சுத்தமில்லை.. எவரும் இங்கே யோக்கியரில்லை..” என்பது போல மலையாளத் திரைப்பட உச்ச நட்சத்திரங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பெருகி வரும் நிலையில், வங்காளத் திரைப்பட நடிகையான ஸ்ரீலேகா மித்ரா தன்னுடைய மாநிலத் திரையுலக நிலைமையையும் போட்டு உடைத்திருக்கிறார். மலையாளத் திரைப்பட நடிகர் ரஞ்சித் மீதான தனது குற்றச்சாட்டையடுத்து, வங்காளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும், தயாரிப்பாளர்களும் தன்னை முற்றிலுமாக ஒதுக்கி ஓரங்கட்டியதாகத் தெரிவித்துள்ளார். பாலியல் சீண்டல் செய்யும் ஆண்களால் மட்டுமின்றி, திரையுலகில் அது தொடர்பான அற்பத்தனமான அணுகுமுறைகளாலும், பழிவாங்கல் நடவடிக்கைகளாலும் நான் களைப்படைந்து, நோய்வாய்ப்பட்டேன் என்றும் ஸ்ரீலேகா மித்ரா தெரிவித்திருக்கிறார்.
திரையுலக சீண்டல்கள் குறித்து, சினிமாக்கள் வரத் தொடங்கிய காலத்திலிருந்தே நிறைய புகார்கள் உண்டு. பெண்கள் பணியாற்றும் எல்லாத் துறைகளிலும் இத்தகைய போக்குகள் தொடர்கின்ற நிலையில், ஒவ்வொரு துறையாக விழிப்புணர்வும் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டு வந்தன. திரைத்துறையில் அதற்கு போதுமான இடம் கொடுக்க விருப்பமில்லை போலும். மற்ற துறைகளைவிட இங்கே சீண்டல்கள் அதிகளவில் நீடிப்பதும், திரையில் சென்சார் அனுமதியுடன் வருகின்ற சீண்டல்களை விடவும், திரைக்குப் பின்னே கொடூரமான முறையில் அணுகுமுறைகள் இருப்பதும் மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கின.
தமிழிலும் மலையாளத்திலும் புகழ்பெற்ற நடிகையான ஊர்வசி, “மலையாள நடிகைகள் துணிவாகப் புகார் கொடுத்ததால் இந்த விவகாரம் வெளியே தெரிந்துள்ளது. தமிழ் சினிமாவிலும் இதுபோன்ற சீண்டல்கள் இருக்கின்றன. கதை குறித்தும் காட்சி குறித்தும் விளக்க வேண்டுமென்றால், திரையுலகினர் வந்துசெல்லக்கூடிய பொது இடத்திலோ, காபி ஷாப்பிலோ, ரெஸ்டாரண்ட்டிலோ விளக்கலாம். தனி இடத்திற்கும், வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் நடிகைகளை அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருப்பதுடன், “பிரபலங்களை நோக்கி பொய்யானக் குற்றச்சாட்டு வைப்பவர்களும் இருக்கிறார்கள்” என்பதையும் தெரிவித்திருக்கிறார். பிரபல நடிகையும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு, பெண்களுக்கான பாலியல் தொல்லைகளைப் பற்றித் தெரிவித்திருப்பதுடன், ஆண்களும் சில நேரங்களில் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறியுள்ளார்.
திரையுலகில் எல்லா மாநிலங்களிலும் கட்டுக்கடங்காத அளவில் உள்ள பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசவும் நடவடிக்கை எடுக்கவுமான நேரம் நெருங்கியுள்ளது. மேக்கப் கலைகிறது.