
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாலிவுட் படங்கள் வசூலை வாரிக்குவித்து வந்த காலம் எல்லாம் மலையேறிபோய், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் சினிமாக்களும் இப்போது அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்து வருகின்றன. அதே நேரம் குறைந்த பட்ஜெட்டில் மட்டுமே எடுக்கப்பட்டு தொடர்ந்து வசூலை வாரிக்குவித்து வருகின்றன மல்லுவுட் சினிமாக்கள்.

மல்லுவுட் எனும் மலையாள சினிமா படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகின்றன. மலையாள சினிமாக்கள் எப்போதுமே குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. நடிகர்கள், டெக்னீஷியன்கள் சம்பளம் எல்லாமே மல்லுவுட்டில் மிகவும் குறைவுதான். இப்படி குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் கூட வசூலை வாரிக்குவிக்கின்றன.

முன்பெல்லாம் ஒரு மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூலே 30 கோடி ரூபாய் என்றுதான் இருந்தது. ஆனால் இப்போது அதன் நிலை ரொம்பவே மாறிப்போயிருக்கிறது. மஞ்சும்மல் பாய்ஸ் படம் 249.94 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. ஆடு ஜீவிதம் படம் 157.44 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. ஆவேஷம் படம் 153.52 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. பிரேமலு படம் 127 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தப்படங்கள் மட்டுமே மொத்தம் 690 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கின்றன.

பிரம்மயுகம் -ரூ.58 கோடி, வருஷங்களுக்கு சேஷம் – ரூ.82 கோடி, குருவாயூரம்பளா நடையில் – ரூ.41 கோடி, ஆபிரகாம் ஓஸ்லர் – ரூ.40 கோடி, மலைக்கோட்டை வாலிபன் – ரூ.29 கோடி, இந்தியாவில் இருந்து மலையாளி – ரூ.30 கோடி, அன்வேஷிப்பின் கண்டேதும் -ரூ.16 கோடி, பாவிகேர்டேக்கர் -ரூ.15கோடி வசூலித்துள்ளது.

கடந்த ஆண்டில் கண்ணூர் ஸ்குவாட், 2018, ஆர்.டி.எக்ஸ், நேரு, ரொமான்ச்சம் உள்ளிட்ட படங்கள் வசூலில் சாதனை படைத்தன. 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டின. இந்த ஆண்டில் இந்த வசூல் இருமடங்காக அதிகரித்துள்ளது.
ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையிலுமே 985 கோடி ரூபாய் வசூலித்துள்ளன மலையாளப்படங்கள். திரையுலக வரலாற்றில் முதன்முறையாக மலையாள சினிமா 1000 கோடி ரூபாய் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்திருக்கிறது.