மாலி மேற்கு ஆப்பிரிக்காவில் (West Africa) உள்ள ஒரு நாடாகும். மேலும் ஆப்பிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு இதுவாகும். இந்நிலையில், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஜே.என்.ஐ.எம் (JNIM) போன்ற பயங்கரவாத அமைப்புகள் அந்நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைக் குறிவைத்துத் தாக்கி வருகின்றன.
இந்த நிலையில், 2025 நவம்பர் 6-ஆம் தேதி நள்ளிரவில், மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் (Mali) பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய மூவரும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா மற்றும் தளபதி சுரேஷ் ஆகிய இருவரும் அடங்குவர்.
இவர்கள் சென்னையில் (Chennai) உள்ள ஒரு தனியார் மின்சார நிறுவனத்தின் மூலம் மாலியில் மின்சாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது. மேலும், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் இவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க பெரும் தொகையை பிணைத் தொகையாகக் கோரியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அளித்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்களவையில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவசர மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
