
மதிமுகவில் வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்குமான மோதல் வலுத்து வருகிறது.
வெளிநாட்டுப் பயணங்களின் போது கட்சி தலைமையிடம் அனுமதி பெறாமல் சென்றதாகவும், கட்சியின் பெயரையும் தனது பெயரையும் எங்கேயும் சொல்லாமல், தன்னையும் மதிமுககாரர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் ‘மாமல்லபுரம் தமிழ்ச்சங்கத் தலைவர்’ என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், கட்சியை விட்டு வெளியேறி கட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளவர்களோடு உறவாடுவதாகவும், கட்சிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் போடுவோருடன் உறவு வைத்திருப்பதாகவும் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் வைகோ.

மதிமுகவில் 32 ஆண்டுகள் பயணித்து வரும் தனக்கு வைகோ துரோகப் பட்டம் கட்டியதை தாங்கிக்கொள்ள முடியாமல், தன் மகன் துரை எம்பியின் அரசியலுக்காக 32 ஆண்டுகள் வெளிப்படைத் தண்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையின் 32 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி கட்சி என்று பணியாற்றி வந்த தன் மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப் பட்டதால் தன்னால் தூங்க முடியவில்லை. என் அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு வேறு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாமே. அல்லது ஒரு பாட்டில் விசம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்து போய் இருப்பேனே என்று ஊடகங்களுக்கு அளித்து வரும் பேட்டிகளில் கதறிக் கதறி அழுகிறார் மல்லை சத்யா.
மல்லை சத்யா செய்தது தவறு என்றால் அவர் தரப்பு விளக்கம் அளிக்க கால அவகாசம் தர வாய்ப்பிருக்கிறதா? என்றால் அதற்கு இனி வாய்ப்பே இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறார் வைகோ.

அப்படியானால் மல்லை சத்யாவுக்கு இனி மதிமுகவில் இடமில்லை என்பது மாதிரியே தெரிகிறது.
மல்லை சத்யாவும், கடந்த 9ம் தேதி வரையிலும், ‘
’’மல்லை சி ஏ சத்யா, துணை பொதுச் செயலாளர்மறுமலர்ச்சி திமுக, 09 07 2025’’ என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தவர், அதன் பின்னர்,
‘’மல்லை சி ஏ சத்யா, தலைவர், மல்லைத் தமிழ்ச் சங்கம் & உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் (ஆசிய)12 07 2025’’ என்று பதிவிட ஆரம்பித்துவிட்டார்.
மதிமுகவில் மல்லை சத்யாவின் பயணம் முடிவை நோக்கி பயணிகிறது என்பது உறுதியாகிறது.

அதனால்தானோ என்னவோ தெரியவில்லை, மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் தங்களின் கார்கள் மற்றும் வீடுகளில் உள்ள மதிமுக கொடி மற்றும் வைகோவின் புகைப்படங்களை அகற்றி வருகின்றனர்.