அரசு உயரதிகாரியாக இருந்துகொண்டே மதத்தின் பெயரால் வாட்ஸ் ஆப் குழு அமைத்து அதிரவைத்த தமிழ்நாட்டை பூர்வீகம் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி கேரளாவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன். இவர் கேரளாவில் தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குநராக உள்ளார். இவர் தீபாவளி தினத்தன்று கேரள மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் பலரை இணைத்து ‘மல்லு ஹிந்து ஆஃப்’ எனும் வாட்ஸ் ஆப் குழுவினை தொடங்கியுள்ளார்.
‘மலையாள இந்து அதிகாரிகள்’ எனப்பொருள்படும் அந்த வாட்ஸ் அப் குழுவினை பார்த்த அதிகாரிகள் அதிர்ந்து போய், தங்கள் அனுமதி இல்லாமல் ஏன் இப்படி ஒரு காரியத்தை செய்யவேண்டும் என்று கோபாலகிருஷ்ணனிடம் ஆவேசப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த வாட்ஸ் ஆப் குழுவினை நீக்கி இருக்கிறார் கோபாலகிருஷ்ணன். இதற்கிடையே அந்த குழு குறித்த விபரம் எல்லாம் ஊடகங்களில் பரவிவிட்டது. அரசு உயரதிரிகளே இப்படி மதத்தின் பெயரால் குழு தொடங்கலாமா என்று கண்டனங்கள் எழுந்தபோது, வாட்ஸ் ஆப் முகவரியை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று சொல்லி சமாளித்தார்.
மல்லு இந்து என்று குழு வந்தது மட்டுமல்ல மல்லு முஸ்லீம் ஆஃப் என்பன போன்று 11 குழுக்கள் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்திய கோபாலகிருஷ்ணன், அந்த குழுக்களை எல்லாம் நீக்கி இருக்கிறார்.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்ததால் விசாரணை நடத்த கேரள முதல்வர் பிரனராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். விசாரணையை அடுத்து தலைமைச்செயலாளர் சாரதா முரளீதரன், பினராயி விஜயனிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கைக்கு பின்னர் ஐஏஎஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் தொழில்துறை இயக்குநர் பதவியில் சஸ்பெண்ட் ஆகி இருக்கிறார்.