
லவ் டுடே, டிராகன் படங்களை அடுத்து பிரதீபு ரங்கநாதன் மூன்றாவதாக ஹீரோவாக நடித்திருக்கும் படம் டியூட். தீபாவளி ரேசில் பைசன், டீசல் படங்களுடன் களமிறங்கியது டியூட். ஆரம்பத்தில் பைசன் படத்தை மட்டுமே பாராட்டி வந்தனர். லவ் டுடே, டிராகன் படங்கள் அளவுக்கு டியூட் இல்லை என்று சுமாரான விமர்சனங்களே வந்தன. ஆனால், பேய்ஹிட் என்று சொல்ல வைத்துவிட்டது. தீவாவளி ரேசில் டியூட் படம்தான் வின்னராக மாறி இருக்கிறது. 5 நாட்களில் 95 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று சோனி நிறுவனத்திற்கு எதிராக இளையராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது, டியூட் படத்தில் கூட தனது இரண்டு பாடல்களை பயன்படுத்தி உள்ளனர் என்று இளையராஜா தரப்பினர் வாதம் செய்தனர்.

அதற்கு, அது தொடர்பாக தனியாக வழக்கு தொடரலாம் என்று நீதிபதி செந்தில்குமார் தெரிவித்தார்.
புதுநெல்லு புதுநாத்து படத்தில் தன் இசையமைப்பில் வெளிவந்த ‘கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்’ பாடல் டியூட் படத்தில் இடம்பெற்றுள்ளது என்று இளையராஜா புகார் சொல்ல, அது தொடர்பாக உயர்நீதிமன்றமும் வழக்கு தொடர அனுமதி அளித்திருக்கும் நிலையில், கருத்த மச்சான் பாடலுக்கு டியூட் நாயகி மமிதா பைஜூ ஒத்திகை பார்த்த வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
மமிதா ரசிகர்கள் இதை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது இளையராஜாவை மேலும் வெறுப்பேற்றாதா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.