கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம், கால்பந்து மைதான அளவு கொண்ட டிமார்போஸ்(Dimorphos) என்கிற சிறுகோளின் பாதையை திசை திருப்ப, பூமியில் இருந்து DART விண்கலத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக ஏவியது. சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு, 2022 செப்டம்பர் 26-ம் தேதி டிமார்போஸ் சிறுகோள் மீது விண்கலத்தை மோதி நாசா வெற்றி கண்டது.
DART Mission
நாசாவால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட இந்த மோதல், பூமியை அச்சுறுத்தும் விண்வெளிப் பாறைகளை வேறு வழிக்கு திசைமாற்ற முடியுமா? என்பதை சோதிக்க மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, பூமிக்கு அருகே உள்ள 160 மீட்டர் அகலமுள்ள டிமார்போஸ் (Dimorphos) சிறுகோள் மீது DART விண்கலம் மோதி திசை திருப்பப்பட்டது. Double Asteroid Redirection Test என்பதன் சுருக்கமே DART ஆகும். இரட்டை சிறுகோள்களை திசைமாற்றும் பரிசோதனை என்பது இதன் பொருள்.
அதை தொடர்ந்து, டிமார்போஸ் சிறுகோள் மீது DART விண்கலம் மோதியதால் விண்ணில் சுமார் 10,000 கிலோமீட்டர் தூரத்திற்கு பாறை சிதறல்கள் பரவி இருந்ததை காட்டும் படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருந்ததது நாசா மையம்.
இந்த நிலையில், டிமார்போஸ் சிறுகோளின் பாறை சிதறல்கள் பரந்த புலத்தை உருவாக்கியுள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 2 மில்லியன் பவுண்டுகள் (கிட்டத்தட்ட 10 லட்சம் கிலோகிராம்கள்) எடையுள்ள இந்த பாறை சிதறல்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கல் மழையை ஏற்படுத்தக்கூடும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 முதல் 30 ஆண்டுகளுக்குள் DART மிஷன் மோதலால் ஏற்பட்ட பாறை துண்டுகள் பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தை அடையலாம் என்று அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம்(Cornell University) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த துகள்கள் பூமி மற்றும் செவ்வாய் கிரகங்களின் வளிமண்டலத்தில் நுழையும்போது, அவை புலப்படும் விண்கல் மழையை (Visible Meteor Showers) உருவாக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய நீண்ட கால விளைவுகள் குறித்து இத்தாலியின் மிலனின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எலோய் பெனா அசென்சியோவின் கூறுகையில், இந்த விண்கல் மழை ஒரு நூற்றாண்டு வரை நீடிக்கும் என்றும், அந்த காலக்கட்டத்தில் பாறை துண்டுகள் இடையிடையே மற்றும் அவ்வப்போது பூமிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தானியங்கள் அளவு முதல் ஸ்மார்ட்போன் அளவு வரையில் இருக்கும் இந்த பாறை துகள்கள், பூமியின் மேற்பரப்பில் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், அவை சிதைந்து, எந்தத் தீங்கும் விளைவிக்காமல் வானத்தில் ஒளிரும் கோடுகளை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
நாசா நடத்திய இந்த DART மிஷன், அபாயகரமான சிறுகோள்களைத் திசைதிருப்பும் திறனை வெற்றிகரமாக நிரூபித்தது மட்டுமல்லாமல், மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் விண்கல் மழைக்கு வழிவகுக்கும் ஒன்றாகவும் அமைந்துள்ளது.