
இந்தியாவின் துண்டிக்கப்பட்ட மாநிலமாக கடந்த இரண்டாண்டுகளாகத் தவித்துக் கொண்டிருக்கிறது மணிப்பூர். பழங்குடி மக்களுக்கிடையே இனப்பகையை மூட்டி விடும் வகையில், மணிப்பூரை ஆள்கின்ற பா.ஜ.க. கூட்டணி அரசு எடுத்த முடிவுகள், எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றும் வேலையாக அமைந்தன. இரு சமுதாயத்தினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாநிலத்தின் அமைதி சீர்குலைந்தது. பெண்கள் மீது கொடூரத் தாக்குதல் நடந்தது. ஆடைகளை களைந்து ஊர் நடுவே அடித்து இழுத்துச் செல்லும் கொடுமையை நாடே பார்த்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மணிப்பூரின் இரண்டு எம்.பி. தொகுதிகளிலும் பா.ஜ.க.வை தோல்வியடையச் செய்து தங்கள் மன உணர்வை வெளிப்படுத்தினர் அம்மாநில மக்கள்.
மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை வெளியில் உள்ள யாரும் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கவனமாக இருந்தது. நெடுங்காலமாகவே அங்கே அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் போராடி வருகிறார்கள். சிறப்பு ராணுவச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பெண்கள் தொடர் போராட்டத்தை நடத்திய மாநிலம் அது. ஐரோம் ஷர்மிளா என்ற சமூகப் போராளி பல ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து இந்த சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரை வலிந்து கைது செய்து, மூக்கு வழியே குழாய் மூலம் உணவு செலுத்தும் நிலையும் ஏற்பட்டது. எனினும், பிரச்சினைகள் வேறு வேறு வடிவில் உருவெடுத்துக் கொண்டே இருந்தன.
டபுள் இன்ஜின் சர்க்கார் எனப்படும் மத்திய-மாநில பா.ஜ.க அரசுகள் மணிப்பூரில் உரிமைக்காகப் பாடுபடும் மக்களை, இந்திய மக்களாகப் பார்க்காமல் மதரீதியானப் பார்வையில் அணுகியதே தற்போதைய வன்முறைக்கும் அமைதியின்மைக்கும் காரணம். இதை எடுத்துச் சொன்ன அரசியல் கட்சிகள் மீது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வெறுப்பைக் கக்கினார்கள். மணிப்பூர் முதலமைச்சரான பா.ஜ.க.வின் பைரன் சிங் அங்குள்ள நிலைமையைத் திறமையாகக் கையாள்வதாக அவருக்கு ‘நற்சான்றிதழ்’ வழங்கினார்கள். உண்மை வேறு மாதிரியாக இருந்தது.
மணிப்பூரில் குறிப்பிட்ட பழங்குடி சமுதாயத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டி விடும் வகையிலான பேச்சு அடங்கிய ஆடியோ ஒன்று பரவியது. அதிலிருந்த குரல் முதலமைச்சர் பைரன் சிங்குடையது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதை பா.ஜ.க.வின் மாநிலக் கட்சியினர் முதல் அகில இந்தியத் தலைமை வரை மறுத்தனர். இது குறித்த வழக்கில், அந்த ஆடியோவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். பரிசோதனையின் முடிவு குறித்த அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்தான், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநரிடம் அளித்தார். இப்போது புதிய முதலமைச்சருக்கான தேடலில் உள்ளது மணிப்பூர் பா.ஜ.க.
நாட்டையே பதறவைத்த மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் ஆளுங்கட்சியினர் தூண்டுகோலாக இருந்தது அம்பலப்பட்ட நிலையில்தான், முதலமைச்சரின் ராஜினாமா நாடகம் அரங்கேறியுள்ளது. இது எந்த வகையிலும், இரண்டாண்டு கால வன்முறைக்கான நீதியாகிவிடாது. பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் வன்முறையை விதைக்கும் மண்ணில் எல்லாம், மற்றவர்களை எதிரிகளாக, வெளிநாட்டவர்களாக, குற்றவாளிகளாக சித்தரிப்பது வழக்கம். மணிப்பூராக இருந்தாலும் திருப்பரங்குன்றமாக இருந்தாலும் வன்முறையைத் தூண்டி அரசியல் லாபம் பார்ப்பதுததான் பா.ஜ.க.வின் திட்டம்.
மணிப்பூரில் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய பழங்குடி மக்களை மதரீதியாக அடையாளப்படுத்தி, அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக முத்திரை குத்தி, போதைப் பொருட்களை உற்பத்தி செய்யும் பயிர்களை வளர்ப்பதாகக் குற்றம்சாட்டி, தீவிரவாதிகளாக சித்தரித்தது பா.ஜ.க. அரசு. தற்போது ராஜினாமா செய்துள்ள பைரன் சிங்கைப் பாதுகாப்பதிலேயே பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கவனமாக இருந்தார்கள். குஜராத், உத்தரபிரதேசம் உள்பட பல மாநிலங்களிலும் இதே வன்முறை வழிமுறையில்தான் மக்களை பிளவுபடுத்தி, வெறுப்பை விதைத்து பா.ஜ.க. தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதே அரசியல் வரலாறு.
இதனை மணிப்பூர் பழங்குடியினர் உணர்ந்திருப்பதால்தான் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்களே மாநிலத் தலைமை கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு ஆதரவு தந்த கட்சிகளும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. பழங்குடி மக்கள் வாழும் பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கிற அளவிற்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பைரன் சிங் ராஜினாமா மட்டுமே மணிப்பூர் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்துவிடாது. பதவி விலகுவது என்பது தீர்வாகிவிடாது. சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்.