400 நாட்களுக்கு மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் சிறுபான்மை அரசு நடத்தும் சூழல் வந்ததால் அதிகார மயக்கத்தில் இருந்து மீண்டு, மணிப்பூர் பிரச்சனையை கவனிக்க அரம்பித்திருக்கிறது மோடி அரசு.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி மக்கள் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து கேட்டு போராடியதால் அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டதால் மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடி சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்து 400 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிகிறது மணிப்பூர்.
இந்த கலவரத்தில் குக்கி இன பெண்கள் இருவரை மெய்தி இன ஆண்கள் நிர்வாணமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ வெளியாகி உலகையே உலுக்கி எடுத்தது.
தொடர்ந்து மணிப்பூரில் பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், துப்பாக்கி சூடுகள், உயிரிழப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன. பிரதமர் மோடியோ ஒருமுறை கூட மணிப்பூர் சென்று நிலைமையை அறியவில்லை. மணிப்பூர் பிரச்சனை பற்றி பேசாமல் மவுனம் காத்து வந்தார்.
மோடியின் இந்த மவுனத்திற்கு மணிப்பூர் மக்கள் தக்க பதிலடி கொடுத்து விட்டனர். மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தோல்வியையே பரிசாக தந்துவிட்டனர்.
நாடு முழுவதும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாமல் கூட்டணி பலத்துடன் சிறுபான்மை அரசு அமைத்திருக்கும் பாஜகவின் நிலையை பார்த்து, ஆர்.எஸ்.எஸ். அறிவுரை கூறியிருந்தது. ’’தேர்தல் கொண்டாட்டங்கள் போதும். ஓராண்டாக அமைதிக்காக காத்திருக்கிறது மணிப்பூர். மக்கள் பிரச்சனைகளில் இனி கவனம் செலுத்துங்கள்’’ என்று ஆத்திரப்பட்டிருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு பின்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஓராண்டுக்கும் மேல் இனக்கலவரம் நடக்குக்ம் மாநிலத்தில் இனியும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குக்கி, மெய்தி மக்களுக்கு இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு சமூக மக்களுக்கு இடையே இருக்கும் பிளவை ஒன்றிய அரசு சரிப்படுத்தும்’’ என்று சொல்லி இருக்கும் அமித்ஷா, மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயர்ந்த மக்களுக்கு முறையாக சுகாதாரம், கல்வி, அம்மக்களின் மறுவாழ்வினை உறுதி செய்யுமாறு மணிப்பூர் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குட்டு பட்டதால் ரொம்ப ரொம்ப தாமதமாக மணிப்பூர் தீயை அணைக்க முன்வந்திருக்கிறது பாஜக என்பதையே. மூன்றாவது முறை பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்தாலும், சிறுபான்மை அரசு அமைந்திருப்பதால், மணிப்பூரில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதால் அம்மக்களின் பிரச்சனையை தீர்க்க இப்போது முன்வந்திருப்பது குறித்து தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், ‘’மணிப்பூர் கலவரத்தை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரதமர் மோடி அரசு எப்படி கையாண்டது என்பது உலகறிந்த உண்மை. தற்போது பெரும்பான்மை இழந்த கட்சியாக பாஜக, சிறுபான்மை அரசு நடத்தி வருவதால் மணிப்பூர் கலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்ததோடு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது மக்களாட்சி முறையின் மகத்துவத்தை காட்டுகிறது’’என்கிறார்.
மேலும், ‘’இப்பேச்சுவார்த்தையை அப்போதே நடத்தியிருந்தால் எத்தனையோ அப்பாவி உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இதைத்தான் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது’’என்கிறார்.
வாக்குகளை மட்டுமே கவனத்தில் கொண்டு மணிப்பூர் மக்களின் வாழ்க்கையை கவனத்தில் கொள்ள மறுத்த பாஜகவுக்கு வாக்குகள் போடாததால்தான் அம்மக்கள் பற்றிய கவலை வந்திருக்கிறது.