நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த மணிப்பூரின் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு தெருவில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி இனப் பழங்குடிகளிடையே கடந்த ஆண்டு முதல் மிகப் பெரும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வன்முறையின் உச்சமாக இரு குக்கி இனப் பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியிருந்து.
கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரின் சூரசந்த்பூரில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், போலீஸாரின் முன்நிலையிலேயே அந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது.
சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை
குக்கி இனப் பழங்குடியை சேர்ந்த இரு பெண்களை முதலில் கொடூரமாகத் தாக்கிய வன்முறை கும்பல், பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. தொடர்ந்து, இரு பெண்களையும் நிர்வாணப்படுத்திய கும்பல் சாலையோரத்தில் இருந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றி இருக்கிறது.
ஆனால் போலீஸ் வாகனத்தின் ஓட்டுநர் சாவியை மறுத்ததனால், ஆத்திரமடைந்த வன்முறை கும்பலைச் சேர்ந்த இரு குண்டர்கள், போலீஸ் வாகனத்தில் இருந்து இரு பெண்களையும் கீழே இழுத்து தள்ளிவிட்டுள்ளனர்.
அங்கிருந்த போலீசாரின் முன்னிலையில் இத்தகைய கொடூரமும் நிகழ்ந்துள்ளது. அப்போது மொத்தம் 7 போலீசார் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு உதவுங்கள் என்று கெஞ்சியும், போலீசார் மவுனமாகவே கை கட்டி வேடிக்கைப் பார்த்துள்ளனர்.
மேலும், பெண்களின் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மீது சுமார் 800-1000 பேர் கொண்ட கும்பல் கொடூரத் தாக்குதல்களை நடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை சார் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் நடவடிக்கைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள் என்று மணிப்பூர் மாநில டிஜிபி கூறியுள்ளார்.
மணிப்பூர் மாநில அரசு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்களின் பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வரும் சூழலில், தற்போது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகள் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது