திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது மாஞ்சோலை. சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த மாஞ்சோலை மற்றும் குதிரைவெட்டி, நாலுமுக்கு , காக்காச்சி பகுதிகளை 1919 முதல் 2028 வரையிலும் பிபிடிசி என்கிற பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது. இந்த 8,373 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை, காபி, ஏலக்காய் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டது அந்த நிறுவனம்.
நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேராளாவில் இருந்து இப்பகுதிக்கு வந்து ஒப்பந்த மற்றும் நிரந்தர தொழிலாளர்களாக பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
பிபிடிசியின் குத்தகை காலம் முடியும் இன்னும் 4 ஆண்டுகள் இருந்தாலும், இந்த மாஞ்சோலையை காப்புக்காடாக அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் வனத்துறை இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனால் திடீரென மாஞ்சோலையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உள்ளதால் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதனால், மாஞ்சோலையை தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்துள்ளது.
விசிகவின் துணை பொதுச்செயலாளர் இது குறித்து வெளியிட்டிருக்கும் கோரிக்கை கடிதத்தில், ‘’திருநெல்வேலி மாவட்டம் களக்காடு – முண்டந்துறை வனப்பகுதியில் உள்ள 8,373 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழ்நாடு அரசு காப்புக்காடுகளாக கொள்கை முடிவு எடுத்து அறிவித்ததால்,அங்குள்ள தொழிலாளர்கள் வெளியேறும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. ஆகவே, இங்குள்ள நிலைமையை அறிய வாருங்கள் என தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் அழைத்ததன் பேரில் மாஞ்சோலைக்கு பயணமானோம்.
மாஞ்சோலையில் பெரியவர் ஒருவர் வரவேற்றார்.“வாங்க உண்மையான சமத்துவபுரத்துக்கு போகலாம்”என லைன் வீடுகளுக்கு அழைத்துச்சென்றார். சுமார் 100 வீடுகளுக்கு மேலுள்ள ‘சுண்ணாம்பு டிவிசன்’ என அழைக்கப்படும் அந்த குடியிறுப்புகளுக்குள் பல சமூகத்தைச்சர்தோர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.
தாத்தா,அப்பா,பிள்ளை, பேரன் என சாதி,மதமற்ற மக்களாக வசித்து வருகிறார்கள். வன பேச்சியம்மன் கோவிலும் உள்ளது. தேவாலயமும் உள்ளது. திருவிழாக்காலங்களில் இந்துக்களும் கிறித்தவர்களும் ஒன்றாகவே கடவுளை வணங்கி வருகின்றனர்.
வரும் ஆகஸ்டு 2028 ஆண்டோடு வீடுகளை காலி செய்து விட்டு வெளியேற வேண்டும் என மும்பை-பிபிடிசி என்ற தனியார் தேயிலை நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துள்ளதாக மக்கள் வருந்தி சொன்னார்கள்.
அந்நிறுவனத்தில் தற்போது ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைவதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அந்நிறுவனம் குறைந்த பட்ச செட்டில்மன்ட்டை அறிவித்துள்ளதாக அழுதபடி சொன்னார்கள்.
கம்பெனி பணம் செட்டில்மென்ட் எவ்வளவு தெரியுமா?
30 ஆண்டுகள் உழைத்திருந்தாலும் ஒன்னரை லட்சம் காசோலையாக கொடுத்திருக்கிறது. வீடுகள் மற்றும் கம்பெனியின் பொருட்களை ஒப்படைத்து விட்டு, இன்னும் ஒன்னரை லட்சம் வாங்கி விட்டு வெளியேற வேண்டுமாம்.
தலைமுறை தலைமுறையாக உழைத்த தொழிலாளர்களுக்கு செட்டில்மென்ட் வெறும் 3 லட்சம் என்பது அநீதி இல்லையா? என ஞாயமாக கேள்வி எழுப்புகிறார்கள்.
அது மட்டுமல்ல,விருப்ப ஓய்வு என்ற பெயரில் மறைமுகமாக கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி விருப்ப ஓய்வு படிவத்தில் கையெழுத்து பெற்று, அவர்களை வெளியேற்றும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இதனால் அம்மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் போகலாம் போகும் போது எங்களுடைய தாய், தந்தையரை புதைத்த சுடுகாட்டையுமா நாங்கள் எடுத்து செல்ல முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்கள்.
குளர்ந்த மலைப்பிரதேசம் இப்போது இம்மக்களின் குமுறலாலும் கேள்விகளாலும் வெப்பமாகிக் கொண்டிருக்கிறது.
இச்சூழலில், மக்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள் மூன்று தான்.
1மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களுக்கான வாழ்வுரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
2.நான்கு தலைமுறையாய் வாழ்ந்து வந்த மக்களை வெளியேற்றி அகதிகளாக்கும் கொடுமை தடுக்கப்பட வேண்டும்.
3. மும்பை நிறுவனத்தோடு ஒப்பந்தம் முடிந்தாலும்தேயிலை நிலத்தை TANTEA நிறுவனமே எடுத்து நடத்த வேண்டும்.அதாவது, தமிழ்நாடு அரசே எடுத்து நடத்த வேண்டும்.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்து தமிழ்நாடு அரசு முடிவெடுத்து, மாஞ்சோலை மக்களை பாதுகாக்க வேண்டும்’’என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், மாஞ்சோலை மக்கள் 700 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரியும், மறு பணி வாய்ப்பு வழங்கும் வரை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வழக்கில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி ஏற்படுத்தும் வரை அவர்களை வெளியேற்றக்கூடாது. மாஞ்சோலை தொழிலாளர்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.