இந்திய பிரதமர்களில் நேரடி அரசியல் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒருவர் அந்தப் பொறுப்புக்கு வந்தபோது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. எனினும், அதற்கு முன் அவர் இந்தியாவின் நிதித்துறை அமைச்சராக இருந்த காரணத்தால், அவருடைய நிர்வாகத்தை அறிந்த நாட்டு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர். அந்த நம்பிக்கையை முதல் ஐந்தாண்டு காலத்தில் நிரூபித்து, அடுத்த ஐந்தாண்டு காலமும் பிரதமரானார். அந்த பெருமைக்குரிய டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கட்சி கடந்த இரங்கல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மறைவு எந்தளவுக்கு நமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்?
உலக அரங்கில், இந்தியா மீதான தனிப்பார்வை எப்போதும் உண்டு. நேரு, இந்திரா, ராஜீவ் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோது உலக நாடுகளில் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. அணி சேரா நாடுகள், சார்க் நாடுகள் எனப் பல கூட்டமைப்புகளிலும் இந்தியாவுக்கு முக்கியத்துவம் இருக்கும். ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு இந்தியாவில் செல்வாக்கு மிக்க ஒரு தலைவர் என்று யாருமில்லாத நிலையில், 1991 தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக, நரசிம்மராவ் பிரதமராக அவரது அமைச்சரவையில் நிதியமைச்சரானார் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான மன்மோகன்சிங்.
சோவியத் யூனியன் சிதைந்து போய் பல நாடுகளாகிவிட்டதால், அமெரிக்கா மட்டுமே ஒற்றை வல்லரசானது. மற்ற நாடுகள் அதன் தோழமை சக்திகளாக நிற்க, பொருளாதாரக் கொள்கைகள் மாற்றம் பெற்றன. அரசுடைமை தகர்ந்து தனியார்மயம் பெருகியது. கட்டுப்பாடுகள் நொறுங்கி தாராளமயம் வளர்ந்தது. உலகமே வணிக சந்தையாக மாற்றம் பெற்றது. இந்த மாற்றத்திற்கு சீனா போன்ற கம்யூனிச நாடுகளும் தங்களைத் தகவமைத்துக் கொண்ட சூழலில்தான், உலக நாடுகளின் பார்வையில் மிகப் பெரிய வணிகச் சந்தையாகக் கருதப்பட்ட இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் எந்தத் திசையில் நகரப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. அதற்கான விடையைச் சொன்னவர்தான் மன்மோகன்சிங்.
நேரு காலத்தின் கலப்புப் பொருளாதாரக் கொள்கை கைவிடப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பதில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு இடமளிக்கும் வகையில் புதிய பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்பட்டது. தொழில் தொடங்குவதற்கான உரிமம், சலுகைகள், இதர வசதிகள் தொடர்பாக நீடித்து வந்த கெடுபிடிகளை முற்றிலுமாகத் தகர்த்தது நரசிம்மராவ் ஆட்சியில் மன்மோகன்சிங் கொண்டு வந்த புதிய பொருளாதாரக் கொள்கை. இந்த மாற்றங்களால் உள்நாட்டு முதலாளிகள் பெற்ற பலன்களைவிட வெளிநாட்டு நிறுவனங்களே அதிகளவில் இந்திய சந்தையை ஆக்கிரமித்தன.
எடுத்துக்காட்டாக, காளிமார்க்-டொரினோ-வின்சென்ட் போன்ற உள்ளூர் குளிர்பானங்கள் தங்களுக்கென குறிப்பிட்ட மாவட்டங்களில் நெடுங்காலம் வைத்திருந்த சந்தையை இழந்தன. ஒட்டுமொத்தமாக பெப்சி, கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடித்தன. பெட்டிக்கடை, டீக்கடை போன்ற சிறிய கடைகளுக்கும் ஃப்ரிட்ஜ்ஜை கொடுத்து, அதில் தங்கள் குளிர்பானங்களை மட்டுமே பார்வைக்கு வைக்கும்படி செய்தன. கடைகளுக்கு பெயர்ப் பலகைகளை வண்ண விளக்குகளுடன் அமைத்துக் கொடுத்தன. கடைக்கு பெயிண்ட் அடித்து தந்த நிறுவனங்களும் உண்டு. உள்ளூர் சோடா-கலர் கம்பெனிகளால் இந்தளவுக்கு செலவு செய்ய முடியாது. அவை தங்கள் வணிகத்தை இழந்தன. அம்பானி, அதானி போன்ற அரசியல் ஆதரவுடனான புதிய இந்திய தொழிலதிபர்கள் உருவாகினர்.
அரசு வேலையைவிட பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளம் என்பது கவர்ச்சிகரமாக இருந்தது. தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கித்துறை, பிற சேவைத் துறைகள், ஊடகத்துறை, பங்கு வர்த்தகம் இவை எழுச்சி பெற்றன. விவசாயம், கைத்தொழில் போன்ற பாரம்பரிய வேலைகள் மதிப்பை இழந்தன. நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் தொழில்கள், புதிய முயற்சிகளை சரியாக மேற்கொள்ளும் நிறுவனங்கள், காலத்திற்கேற்ற மாற்றத்தை உணர்ந்த தொழிலதிபர்கள் தாக்குப்பிடித்து மிகப் பெரும் வளர்ச்சியை அடையும் யுகமாக மாறியது.
புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகமாகி 15 ஆண்டு கழித்து அதனை அறிமுகம் செய்த மன்மோகன்சிங்கே இந்தியாவின் பிரதமரானார். உலகளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் தான் உருவாக்கிய கட்டமைப்பைக் கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாத்தார். விவசாயத் தொழிலாளர்களுக்கான 100 நாள் வேலைத் திட்டம், அனைவருக்குமான கல்வித் திட்டம், மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறு-குறு தொழில்களுக்கான வாய்ப்புகள் என இந்தியாவின் நிலையை சமன்படுத்தினார். புதிய பொருளாதாரக் கொள்கையின் சாதக-பாதகங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப செயல்படும் நேர்மைமிக்க பிரதமராக இருந்தார் என்பதுதான் மன்மோகன்சிங் எதிர்காலத்தில் பதிவாகும் வரலாற்றில் பிடிக்கக்கூடிய இடமாகும்.
தமிழுக்கு செம்மொழித் தகுதி, சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டம், சேது சமுத்திரத் திட்டம் தொடக்கம், ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீடு எனத் தமிழ்நாட்டிலிருந்து முன்னிறுத்தப்பட்ட கோரிக்கைகள் மீது அவர் கவனம் செலுத்தினார். அவரது பத்தாண்டுகால ஆட்சியைத் தாங்கிப் பிடித்ததில் தமிழ்நாட்டில் அவரது கட்சியின் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி முக்கிய பங்காற்றியதையும் வரலாறு பதிவு செய்யும்.
நன்று. மறைந்த மாமனிதர் மன்மோகனுக்கு புகழாஞ்சலியாக இத்தலையங்கம் அமைந்திருப்பது சிறப்பு!