
மன்னார்குடியில் பிறந்து நாடக உலகில் நுழைந்து அதன் மூலம் கிடைத்த புகழின் வழியாக திரையுலகில் பிரவேசித்து ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து அசத்திய தமிழ்சினிமாவில் மறக்க முடியாத நடிகை மனோரமா. கடந்த 2015ம் ஆண்டில் அவர் மறைந்தார். அவரது ஒரே மகன் பூபதி(70) இன்று உடல் நலக்குறைவால் மறைந்தார்.
தன்னைப்போலவே பாடும் திறன் கொண்ட மகன் பூபதிக்கு நடிப்பாசையும் இருந்ததால் அதை வளர்த்துக் கொள்வதற்கென்றே நாடக மன்றத்தை நடத்தி வந்தார் மனோரமா. பட்டப்படிப்பை முடித்திருந்த பூபதி நடிப்பின் மீது கொண்ட ஆவலால் நடிகர் விசுவின் குடும்பம் ஒரு கதம்பம் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்த பூபதியை ‘தூரத்து சொந்தம்’ என்று சொந்தப்படம் எடுத்து வளர்த்து விடப்பார்த்தார் மனோரமா. அந்த ஏணியை பிடித்துக்கொண்டு ஏறும் முயற்சியை எடுக்காமலேயே இருந்துவிட்டார் பூபதி. சினிமாவை அடுத்து சீரியல்களில் நடித்து வந்தார்.

பூபதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
மூச்சுத்திணறலால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூபதி மறைந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை மதியம் 3 மணிக்கு கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறுகிறது.