புது டெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்(IPL) போட்டிகள் வருகிற மார்ச் 22-ம் தேதி முதல் நடைபெறும் என்றும், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தாலும் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் IPL தலைவர் அருண் துமால் கூறியுள்ளார்.
வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2024 IPL – 17வது சீசனுக்கான அட்டவணை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
போட்டியின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே முதலில் அறிவிக்கப்படும் என்றும், மீதமுள்ள பட்டியல் பொதுத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அருண் துமல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, முழு ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் நடத்தப்படாமல், தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.
2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது, தொடக்க 20 ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டன. இருப்பினும், 2019-ஆம் ஆண்டில் தேர்தல்கள் நடந்த போதும், முழு ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டன.
மேலும் 2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்று காரணமாக முழு IPL போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டிருந்தன.
இந்தாண்டு IPL போட்டிகளைத் தொடர்ந்து உடனடியாக அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் T20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கும் என்பதால், ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி மே 26 அன்று நடத்தப்படும் என கூறப்படுகிறது.
வழக்கம் போல், 2024 ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெறும்.
2024 ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்தது. அதில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை, IPL வரலாற்றில் இல்லாத அளவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுமார் 24.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.