ஆன்லைன் சுரண்டலகள் மற்றும் துன்புறுத்துதலுக்கு உள்ளான குழந்தைகளின் பெற்றோர்களிடம் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
குழந்தைகளின் தற்கொலை முயற்சி மற்றும் ஆன்லைன் சுரண்டகளுக்குப் பங்களித்த இன்ஸ்டாகிராம் பயன்பாட்டுக்காக அவர்களின் பெற்றோர்களிடம் மெட்டா நிறுவனத்தின தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் மனப்பூர்வமான மன்னிப்பு கோரினார்.
“Big Tech and the Online Child Sexual Exploitation Crisis” என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்ற நீதித்துறை குழுவால் நடத்தப்பட்ட விசாரணையில், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிற சமூக ஊடக தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெற்றோரிடம் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமெரிக்க செனட் நீதித்துறை குழு உறுப்பினர் ஜோஷ் ஹாவ்லி அழுத்தம் கொடுத்ததை அடுத்து ஜுக்கர்பெர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.
“நீங்கள் அனைவரும் கடந்து வந்த சிரமங்களுக்காக நான் வருந்துகிறேன்; உங்கள் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை யாரும் சந்தித்திருக்கக் கூடாது,” என தெரிவித்து ஜுக்கர்பெர்க் அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் மன்னிப்பு கோரினார்.
அமெரிக்காவின் பல மாநிலங்களால் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக குழந்தைகள் பாதுகாப்பு மீறல்கள் குறித்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மெட்டா நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
குழந்தைகளுக்கு ஆர்வத்தைத் தூண்டி மறைமுகமாக இன்ஸ்டாகிராம் தீங்கு விளைவிப்பதாகவும், அவர்களை அடிமையாக்கும் அம்சங்களுடன் அந்த செயலி உருவாக்கப் பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மெட்டா நிறுவனம் தவறி வருவதாக அமெரிக்காவில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், ‘Kids Online safety Act’ என்கிற பெயரில் புதிய சட்டத்தைக் கொண்டுவர அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முயற்சி செய்துவருகின்றனர்.