ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கே இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது மொரிசியஸ் தீவு நாடு. மேற்கத்திய நாடுகளின் காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்த மொரிசியஸ், கடந்த 1968-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.
1810-ம் ஆண்டு மொரிசியஸ் நாட்டை கைப்பற்றிய பிரிட்டன், சுதந்திரம் வழங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 1965-ம் ஆண்டு அந்நாட்டின் சாகோஸ் தீவுக் கூட்டத்தை தனி மண்டலமாக பிரித்து ‘British Indian Ocean Territory’ என அறிவித்தது.
இந்திய பெருங்கடலில் சுமார் 2.5 லட்சம் பரப்பளவில் 60-க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய சாகோஸ் தீவுக்கூட்டத்தில் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக சாகோசிய மக்கள் வாழ்ந்து வந்தனர்.
1960-களில் இவர்களை வெளியேற்றி அங்குள்ள மிகப் பெரிய தீவான டியேகோ கார்சியாவில் பிரிட்டனின் அனுமதி பெற்று அமெரிக்கா கடற்படை தளம் ஒன்றை அமைத்தது.
1968-ம் ஆண்டு மார்ச் 2-ம் தேதி மொரிசியஸ் சுதந்திரம் பெற்றபோது, சாகோஸ் தீவுக் கூட்டத்தின் இறையாண்மையை தன்வசமே வைத்துக் கொண்டது பிரிட்டன்.
அன்று முதல் பல காலமாக மொரிசியஸ் மற்றும் பிரிட்டன் இடையே பிரச்சனை நிலவி வந்தது.
டியாகோ கார்சியா உட்பட சாகோஸ் தீவுக்கூட்டத்தின் மீதான இறையாண்மையை பெற போராடி வந்த மொரிஷியஸ், சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு, சாகோஸ் தீவுக்கூட்டத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, 2021 ஜனவரி மாதம் ஐநா சபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேறியது. மொரிஷியஸ் நாட்டுக்கு இந்தியா தனது உறுதியான ஆதரவை வழங்கியது.
பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
அதே ஆண்டு கடல் சட்டத்திற்கான சர்வதேச தீர்ப்பாயம், சாகோஸ் தீவுகள் மீது பிரிட்டனுக்கு இறையாண்மை கிடையாது என்றும், ஆகையால் தீவை மொரிசியஸ் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இருப்பினும் சாகோஸ் தீவுகளை ஒப்படைக்க பிரிட்டன் மறுத்து வந்தது.
இந்த சூழலில் பிரிட்டனில் அமைந்துள்ள கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய அரசு, தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
சாகோஸ் தீவுகளை மொரிஷியஸ் நாட்டிடம் ஒப்படைப்பதாக இன்று(அக்டோபர் 3) அறிவித்துள்ள பிரிட்டன் அந்நாட்டுடன் புதிய ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.
சாகோஸ் தீவுகள் மீதான இறையாண்மையை மொரிஷியஸ் கொண்டிருக்கும் என்றும் வரும் 99 ஆண்டுகளுக்கு மட்டும் ராணுவ தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவின் இறையாண்மையை பிரிட்டன் கொண்டிருக்கும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மொரிஷியஸில் உள்ள சாகோசியர்களை மீள்குடியேற்றம் செய்யும் எனவும் பிரிட்டன் ஒரு அறக்கட்டளை நிதியை நிறுவி மற்ற ஆதரவை வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரிஷியஸுக்கு பிரிட்டன் நிதி உதவி வழங்கவும், மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளிக்கவும் இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதனிடையே இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த உடன்படிக்கையை எட்ட முழு ஆதரவையும் உதவியையும் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து மொரிஷியஸ் மற்றும் பிரிட்டன் நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.