மீண்டும் மஞ்சப்பை திட்டம் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு நெஞ்சை நிமிர்த்தி சொல்லி இருக்கிறது.
பதினான்கு வகையான ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தியினையும், விற்பனையினையும் தடை செய்து, ஒருமுறை பயன்படுத்துகின்ற பிளாஸ்டிக் தடையை அமல்படுத்திய மாநிலங்களில் தமிழ்நாடு அரசும் ஒன்று.
பாரம்பரிய துணிப்பைகளை மீண்டும் கொண்டுவரும் நோக்கில், கடந்த 2021 ஆம் ஆண்டும் டிசம்பரில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது ‘மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம்’. இந்த பிரச்சாரம் பொதுமக்களிடையே விழிப்புணர்வையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்களை ஏற்றுக்கொள்வதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்பத்தி இருக்கிறது என்பது தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையின் மூலம் அறியமுடிகிறது. இந்த தாக்கத்தின் மூலமாக மாநிலம் முழுவதிலும் 2.2 இலட்சத்திற்கும் அதிகமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று தெரியவருகிறது.
கடந்த அக்டோபர் 30ம் தேதி அன்று மஞ்சப்பை படைப்பிரிவை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம். இந்த படைப்பிரிவு, விழிப்புணர்வு நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ளாமல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான விதிகளை மீறுகின்றவர்களை கண்டறிந்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக உடனடி நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்திருக்கிறது.
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும், சுற்றுசூழலுக்கு உகந்த மாற்றங்களை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகவும் துணிப்பைகளை வழங்கக்கூடிய புதுமையான மஞ்சப்பை விற்பனை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு அரசு. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்று 188 இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரையிலும் 3,85,000 பைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
உள்ளாட்சி அமைப்புகளினால் தமிழ்நாடு முழுவதிலும் 16 இலட்சத்திற்கும் அதிகமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 2,600 டன் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. விதிகளை – மீறியோரிடம் இருந்து 19 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம் – விழிப்புணர்வு – அமலாக்கம் – டிஜிட்டல் கண்காணிப்பு மூலமாக தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை உபயோகிப்பதை குறைத்து வருகிறது அரசு.