
கடந்த மார்ச் மாதத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். பாரதிராஜாவின் நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, அப்போது இரங்கல் தெரிவித்து வெளியிட்ட வீடியோவில், ‘’இந்த துயரத்தை தாங்கும் மன வலிமையை பாரதிராஜாவுக்கு இறைவன் வழங்கட்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இத்தனை மாதங்கள் ஆகியும் கூட, அந்த துயரத்தில் இருந்து இன்னமும் மீளமுடியாமல் உள்ளார் பாரதிராஜா.
இது குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ், ‘’எல்லோரும் இந்த இழப்பை தாங்கி அடுத்து கட்டத்திற்கு சென்றுவிடுவார்கள். ஆனால், பாரதிராஜாவால் அந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை. இதனால்தான் அவரது மகள் அவரை மலேசியா அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். அதன் பின்னரும் கூட அந்த துயரத்தில் இருந்து அவர் மீண்டு வரவில்லை.

பணம், புகழ் எல்லாம் இருந்தும் தன் மகன் மனோஜ் இழப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவே இல்லை. இப்போது மனோஜ் போட்டோவை பார்த்துக் கொண்டே கண்ணீர் விடுகிறார்.
அவருக்கு பழைய நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா போச்சு. நானே போய் நின்றால் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்துவிட்டு, யாரு…ஜெயராஜா?ன்னு கேட்கிறார். அவர் பழைய நிலைமைக்கு வரவேண்டும். கடைசியாக ஒரு படம் இயக்க வேண்டும். அதில் என்னையும் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது நடக்கவேண்டும்.

யாரையாவது சந்தித்தால் இந்த துயரம் அதிகமாகும் என்றுதான் யாரையும் சந்திக்க விடாதபடி வைத்திருக்கிறோம். இளையராஜா சிம்பொனி இசையமைத்து அவருக்கு அரசு சார்பில் விழா நடந்தது எதுவுமே அவருக்கு தெரியாது’’ என்று யூடியூப் சேனலுக்கு அளித்திருக்கும் நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.