MeToo மூலமாக கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டினை வைத்து, அத்தோடு விடாமல் தொடர்ந்து பல வருடங்களாக அது குறித்து பேசி வருகிறார். அந்த சமயத்தில் சினிமயியைத்தொடர்ந்து பெண் பத்திரிகையாளர்கள் சிலரும், புதிய பாடகிகள் சிலரும் MeToo மூலமாக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர். அவர்களில் சின்மயி மட்டுமே தொடர்ந்து வைரமுத்துவின் ஒவ்வொரு அசைவிலும் தனது ஆத்திரத்தை கொட்டித்தீர்த்துக் கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பாடகி சுசித்ராவின் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து அதுகுறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
ஜேஜே படத்தின் ‘மே மாதம் தொண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே..’ பாடலைக் கேட்டுவிட்டு, உன் குரலில் ஒரு காமம் இருக்கிறது. கேட்டதுமே பைத்தியம் பிடிக்கிறது. உன் குரலைக்கேட்டால் காதல் வருகிறது. உனக்கு ஒரு பரிசு தரவேண்டும் வீட்டுக்கு வா என்று சொல்லி வைரமுத்து அழைத்ததாகவும், தன்னை தொடுவதற்குத்தான் வைரமுத்து அழைக்கிறார் என்று முடிவு செய்து, தனியாக செல்லாமல் பாட்டியுடன் சென்றதாகவும், அதைப்பார்த்து வைரமுத்துவுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது என்றும், தன் பாட்டி வைரமுத்துவை சரியாக கேட்டுவிட்டார் என்றும், கடைசியில் எங்கே அந்த பரிசு என்றதும், பாத்ரூமுக்கு ஓடிப்போய் இரண்டு பாண்டீன் சாம்பு பாட்டில்களை எடுத்து வந்து கொடுக்கிறார்.
அதன் பின்னரும் பாடல் கம்போசிங் என்று சொல்லி பலமுறை என்னை அழைத்தார் வைரமுத்து. ஒவ்வொருமுறையும் அவரது போன் காலை கட் பண்ணி சரியாக மூக்கை உடைத்துவிட்டேன் என்று சொல்லி வருகிறார் சுசித்ரா.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தளத்தில் இந்தக் கவிதையை பதிவேற்றி இருக்கிறார்.
’’வாழ்வியல் தோல்விகளாலும்
பலவீனமான இதயத்தாலும்
நிறைவேறாத ஆசைகளாலும்
மன அழுத்தத்திற்கு உள்ளாகி
அதன் உச்சமாய்
மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்
ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள்மீது
வக்கிர வார்த்தைகளை
உக்கிரமாய் வீசுவர்;
தொடர்பற்ற மொழிகள் பேசுவர்
பைத்தியம்போல் சிலநேரமும்
பைத்தியம்
தெளிந்தவர்போல் சிலநேரமும்
காட்சியளிப்பர்
தம்மைக் கடவுள் என்று
கருதிக்கொள்வர்
இந்த நோய்க்கு
‘Messianic Delusional Disorder’
என்று பெயர்
அவர்கள் தண்டிக்கப்பட
வேண்டியவர்கள் அல்லர்;
இரக்கத்திற்குரியவர்கள்;
அனுதாபத்தால்
குணப்படுத்தக் கூடியவர்கள்
உளவியல் சிகிச்சையும்
மருந்து மாத்திரைகளும் உண்டு
உரிய மருத்துவர்களை
அணுக வேண்டும்.’’
சின்மயி, சுசித்ராவுக்கு பதிலடிதான் இந்தக்கவிதை என்றே பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.