கூட்டுப்பாலியலுக்கு தன்னை கட்டாயப்படுத்தியதாக பிரபல மலையாள இயக்குநரும் நடிகருமான பாலச்சந்திர மேனன் மீது எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை மினு முனீர் புகாரளித்துள்ளார்.
நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் உள்பட 7 பேர் மீது ஏற்கனவே புகார் கூறியிருக்கும் கேரளாவின் எர்ணாகுளம் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை மினு முனீர்தான் பாலச்சந்திர மேனன் மீதும் புகார் கூறியிருக்கிறார்.
இந்த புகாரின் பேரில் சிறப்பு விசாரணைக்குழு நடிகையிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். விசாரணையின்போது, ‘’கடந்த 2007ம் ஆண்டில் ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற படத்தை இயக்கி நடித்தார் பாலச்சந்திரமேனன். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது தன்னை ஓட்டல் அறைக்கு வரவழைத்து பாலியன் வன்கொடுமை செய்தார். அந்த ஓட்டல் அறையில் ஏற்கனவே 3 இளம்பெண்களுடன் உல்லாசத்தில் இருந்தார் பாலச்சந்திர மேனன்.
அப்போது என்னையும் கூட்டுப் பாலியலுக்கு அழைத்தார். நான் அவரை திட்டியபோது, இதைப்பற்றி வெளியே சொன்னால் படத்தில் நீ நடித்துள்ள காட்சிகளை வெட்டிவிடுவேன் என்று சொல்லி மிரட்டினார்.
அதுதான் எனக்கு முதல் படம் என்பதாலும், அவர்தான் எனக்கு வாய்ப்பு தந்தவர் என்பதாலும் நான் பயந்துகொண்டு இதுவரையிலும் சொல்லாமல் இருந்தேன்’’ என்று கூறியிருக்கிறார்.
மலையாள குணச்சித்திர நடிகர் ஜாபர் மீதும் இந்த நடிகை புகார் கூறியிருக்கிறார். அவர் ஓட்டலில் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டதாகவும், 2012ல் லண்டன் கலைநிகழ்ச்சியின் போது ஒரு ஸ்பான்சருடனும் நடிகர் கலாபவன் மணியுடனும் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஜாபர் கட்டாயப்படுத்தியதாக புகாரில் கூறி இருக்கிறார்.